நட்பு – திருமறை வாக்குகளும் திருக்குறட் பாக்களும்

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ – பிரான்சு

(எண்கள் : அடிக்குறிப்பு எண்கள். அடிக்குறிப்புகளை இறுதிப் பக்கத்தில் காண்க)

முன்னுரை :

கிறித்துவ வேத நூலாம் திருமறை நூலின் உள்ளடக்கப் பொருளை எல்லாம் ஒரு வரியில் சொல்லி விடலாம் : பாமரன் மீது மாபரன் கொண்டிருக்கும் அளவிலா, ஆழமான அன்பின் வெளிப்பாடே திருமறைநூல் என்று. திருக்குறளோ – மனிதன் படைத்த மகத்தான மதிநுட்ப நூல் ; வையத்துள் வாழ்வாங்கு வாழும் வழிமுறைகளை எல்லாம் இருவரிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அறிவுநூல். மானிட வாழ்வின் இருகண்களாய் விளங்கும் இந்த இரு நூல்களுமே நட்பைப் பெரிதும் போற்றுகின்றன ; நட்பின் மாண்பினைப் பறைசாற்றுகின்றன. இணைகோடுகளாய் நடைபோடும் இவ்விரண்டு நூல்களில் நட்பு இழையோடும் பாங்குகளை இனிக் காண்போம்.

சொல்லும் பொருளும் :

நட்பைக் குறிக்கப் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் எல்லாமே, எபிரேய வேர்ச்சொற்கள் இரண்டின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன : ‘rh’ & ‘hb (1)
எடுத்துக்காட்டு : ‘reeh’ = நண்பன் ; ‘oheb’ = அன்பு செய்பவன். புதிய ஏற்பாட்டில் சில கிரேக்கச் சொற்களைக் காண்கிறோம் : ‘philos’ = நண்பன், hetairos = (comrade) தோழன், plesion = (neighbour) அயலவன். மேலும், உறவுமுறைச் சொற்களான சகோதரன், தாய், மகன் போன்ற  சொற்கள், குடும்ப எல்லையை மீறி, அன்பின் மிகுதியால் வெளியாரைச் சுட்டவும் பயன்பட்டன (2).: ‘philos’= நண்பன், ‘adelphos’=சகோதரன், ‘adelphe’ = சகோதரி போன்ற சொற்கள் மிக அதிகமாக வழங்கிவந்தன. குறிப்பாக, சகோதரன், சகோதரி என்பவை சக நம்பிக்கையாளர்களைக் (fellow believers) குறிக்கும் (கலைச்) சொற்களாகவே மாறிவிட்டன எனலாம் (3).
நண்பு (4), நட்பு (5), நட்டல்(6), நட்டார்(7), கேண்மை(8), தொடர்பு(9) என நட்பைப் பல சொற்களால் குறிப்பிடுகிறார் வள்ளுவர். நண்பு என்ற சொல் திருக்குறளில் ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ணகரம் டகரமாகும் என்ற இலக்கண மரபுப்படி (10), இந்த நண்பு நட்பாகிறது. வள்ளுவருக்கு இச்சொல் (நட்பு) மிகவும் பிடிக்கும் போலும். பல இடங்களில் இச்சொல்லையே அவர் பெய்துள்ளார். இச்சொல் அறத்துப்பாலில் வருகிறது, பொருட்பாலில் பல இடங்களில் இடம் பெறுகிறது, காமத்துப் பாலிலும் உண்டு (11). மாறாக, தோழன், தோழி, தோழமை போன்ற நட்பியல் சொற்கள் திருக்குறளில் இடம் பெறவே இல்லை.

சுருங்கச் சொல்லின்,  திருமறை நூலில், நட்பைக் குறிக்கும் சொற்கள் ஒரு சிலவே திரும்பத்திரும்பப்  பயன்படுத்தப் பட்டுள்ளன. ஆனால், தக்க இடத்தில், தக்க சொல்லையே சொல்லுதல் வேண்டும் (12) என வலியுறுத்தும் வள்ளுவர், தமிழுக்கே உரிய மொழி வளத்தோடு பல சொற்களைப் பயன்படுத்தித் தமிழுக்கும் தமக்கும் உள்ள நட்பைப் புலப்படுத்தி இருக்கிறார்.

திருமறைநூலில் நட்பு :

மூவகை நிலைக்களன்களின் அடிப்படையில் நட்பு அமைதல் கூடும் என்பதைத் திருமறை நூலில் காணலாம் :
1)    சக பணியாளர் அல்லது உடனிருப்போர் அல்லது முன்பின் அறியாதோர் இடையே எழும் சாதாரண தோழமை.
2)    பிரமாணிக்கத்தின் காரணமாக, அரசியல் காரணமாக எழும் நட்பு
3)    பாசத்தின் அடிப்;படையில் பிறக்கும்  நட்பு
இப்படித் தோன்றும் நட்பில், கடைநிலை, இடைநிலை, முதல்நிலை என மூவகை நிலைகள் உண்டு.

கடைநிலை நட்பு :

அயலவனை அல்லது சகபணியாளரை அல்லது தம் முன் நிற்போரை அல்லது முன்பின் அறியாதவரைகூட ‘நண்பா’ (13) என அழைக்கும் பண்பு யூதர்கள், அராபியர்கள் நடுவில் இன்றைக்கும் உள்ளது. இத்தகைய நட்பு விளியைக் கடைநிலை நட்பு எனலாம். எடுத்துக்காட்டாக, ஏசு பிரான் கூறும் திராட்சை தோட்டத்து உரிமையாளன் கதையைக் காண்க (14 ). காலை முதல் மாலை வரை கடுமையாக உழைத்தவர்க்கும் கடைசி ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தவர்க்கும் ஒரே மாதிரியாக, சமமான கூலி தருகிறான் உரிமையாளன். பல மணி நேரம் உழைத்த பணியாளர்கள், ”கடைசியில் வந்த இவாகள் ஒரு மணி நேரமே உழைத்தனர். பகலின் உழைப்பையும் வெயிலின் கொடுமையையும் தாங்கிய எங்களோடு  இவர்களைச் சமமாக்கினீரே” என்று…முணுமுணுத்தனர். அவனோ மறுமொழியாக, அவர்களுள் ஒருவனிடம் ‘நண்பா, உனக்கு நான் அநீதி செய்யவில்லையே ; ஒரு வெள்ளிக் காசு என்று என்னிடம் நீ கூலி பேசவில்லையா? உனக்கு உரியதை வாங்கிக்கொண்டு போ…’என்றான். இப்படிப் பேச்சளவில் நிற்கும் நட்பு கடைநிலை நட்பு.

இடைநிலை நட்பு :

இடைநிலை நட்பில், பிரமாணிக்கம் வேரூன்றி இருக்கும். தனக்கு எதிராகக் கலகம் செய்து தன்னை அழிக்கத் தேடும் தன் மகன் அப்சலோமிடருந்து தப்பி ஓடுகிறார் தாவீது. அவருடைய ஊழியர் எல்லாரும் அவருக்குப் பக்கத்தே நடந்துபோனார்கள்.  ‘அப்போது, அரசர் (தாவீது) கேத்தையனான எத்தாயியை நோக்கி, ‘நீ எங்களோடு வருவது ஏன்? உன் சொந்த நாட்டை விட்டு வந்துள்ள அகதி அன்றோ நீ? நேற்றுதானே நீ இங்கு வந்தாய்? இன்று எங்களுடன் வரும்படி நான் உன்னை வற்புறுத்துவது  முறையா?… நீயும் உன் சகோதரரும் திரும்பிப்போங்கள். நீ ஊக்கமும் பிரமாணிக்கமுமுள்ளவனாய் இருந்தால், ஆண்டவரும் உனக்கு இரக்கத்தையும் பிரமாணிக்கத்தையும் காட்டுவார்’ என்றார். அதற்கு எத்தாயி கூறும் பதிலில்தான் எவ்வளவு பிரமாணிக்கம் : ”ஆண்டவர் மேல் ஆணை!…என் தலைவரான அரசே, நீர் எங்கு இருப்பீரோ அங்கே உம் அடியானாகிய நானும் இருப்பேன் ; வாழ்ந்தாலும் மடிந்தாலும் இங்கேயே இருப்பேன்(15) -” பிரமாணிக்கத்தின் அடிப்படையில் எழும் இந்த நட்பை ஏற்று அவனைத் தன்னோடு அழைத்துப் போகிறார் தாவீது. பிரமாணிக்க நட்பின் இன்னொரு கோணத்தை இதே அதிகாரம் காட்டுகிறது : ‘ஆண்டவரை வழிபட வேண்டிய மலையின் உச்சிக்குத் தாவீது ஏறிப் போகையில், இதோ கிழிந்த ஆடையுடனும் புழுதி படிந்த தலையுடனும் அரக்கித் ஊரானான கூசாயி அவரை எதிர் கொண்டு வந்தான். தாவீது அவனைப் பார்த்து ”…நீ நகருக்குத் திரும்பிப் போய், அப்சலோமை நோக்கி : ‘அரசே, நானும் உம்முடைய ஊழியன்தான். முன்பு நான் உம் தந்தைக்கு  ஊழியனாய் இருந்தது போல் இப்போது உமக்கும் ஊழியனாய் இருப்பேன்’ என்று சொல்” எனக் கூறி அவனைத் தன் ஒற்றனாக அப்சலோமிடம் அனுப்புகிறார் தாவீது. ”அப்படியே தாவீதின் நண்பன் கூசாயி நகருக்குத் திரும்பிப் போனான்” என இந்த அதிகாரத்தை முடிக்கிறது திருமறை நூல் (16). இப்படி பிரமாணிக்கத்தின் அடிப்படையில் நட்பு கொள்ளும் பலரும் அரசர்களின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமாகிறார்கள்(17). இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு 1 மக்கபே ஆகமம் 10 ஆம் அதிகாரம் 65 ஆம் வசனம் காண்க : ”மன்னன் அவரை (யோனத்தாசை) மேன்மைபடுத்தி தன் நண்பரில் முதல்வராக ஏற்றுக்கொண்டு, அரசில் தலைவரும் அதிகாரியுமாய் நியமித்தான்”.

தீங்கு செய்யும் நண்பர்களுக்கு இடையில் பிரமாணிக்க நண்பர்களும் உண்டு எனத் திருமறை நூல் தெளிவுபடுத்துகிறது(18). இத்தகைய தீர்க்கமான பிரமாணிக்கம் பேரரசன் சீசர் மீது போன்தியூஸ் பிலாத்துவுக்கு இல்லை என மறைமுகமாகக் குற்றம் சாட்டுகின்றனர் யூதர்கள்(19). இத்தகைய பிரமாணிக்கம் மட்டுமல்லாமல் அரசியல் காரணங்களுக்காகவும் நட்பு உருவாகக் கூடும் என்கிறது திருமறைநூல்; : இப்படித்தான் தாவீதும் தீரின் அரசன் ஈராமும் நட்பு கொண்டிருந்தார்கள்(20).; இந்த அரசியல் நட்பு தாவீதுக்குப் பிறகு அரியணை ஏறிய சாலமோன் காலத்திலும் தொடர்ந்தது(21). திருமறை காட்டும் இடைநிலை நட்பின் தன்மைகள் இவை.

முதல்நிலை நட்பு :

மேலே குறிப்பிடப் பட்ட இரண்டு கூறுகளோடு பாசமும் கலக்கும் போது முதல்நிலை நட்பு பிறக்கிறது. நட்பின் மிக உயர்ந்த நிலை இதுவே. யோனத்தாசும் தாவீதும் இத்தகைய நட்புக்கு இலக்கணமும் இலக்கியமுமாகிறார்கள் :’…யோனத்தாசின் உள்ளமும் தாவீதின் உள்ளமும் ஒன்று பட்டன. யோனத்தாசு அவனைத் தன் உயிர் போல் அன்பு செய்தான்.’(22) ; ‘யோனத்தாசும் தாவீதும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். ஏனென்றால், அவன் இவனைத் தன்னுயிர் போல் அன்பு செய்தான்’(23) ; ‘யோனத்தாசு தாவீதின் மேல் அன்பு கூர்ந்தபடியால் பலமுறை (அப்படியே) ஆணையிட்டுச் சத்தியம் செய்தான். ஏனெனில் தாவீதைத் தன்னுயிர் போல் அவன் அன்புசெய்து வந்திருந்தான்’(24);. இத்தகைய பாசமுள்ள முதல்நிலை நட்பு பவுலடிகளாருக்கும் பிலிப்பியருக்கும் இடையே நிலவி இருந்ததை பிலிப்பியருக்கு அவரெழுதிய திருமுகம் காட்டுகிறதே : ‘…உங்கள் எல்லாரையும் பற்றி எனக்கு இத்தகைய உணர்ச்சிகள் எழுவது இயற்கைதானே! ஏனெனில், நான் சிறையில் இருந்தபொழுதும் நான் நற்செய்திக்காகப் போராடி அதை நிலைநாட்டிய போதும் … பங்குகொண்ட நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள்…உங்கள் எல்லார் மீதும் எவ்வளவோ ஏக்கமாயிருக்கிறேன்’(25). அதே திருமுகத்தில் புனித சின்னப்பர் தம் பாசத்தைப் புலப்படுத்துகிறார் : ‘என் அன்புச் சகோதரர்களே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி, நீங்களே என் வெற்றி வாகை…’(26) இவை யாவற்றையும் விட, ஏசுபிரான் திருவாய் மலர்ந்தருளும்  சொற்கள் முதல்நிலை நட்பின் கொடுமுடியையே தொட்டு விடுகின்றன :

‘தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை’(27).

இவ்வண்ணம் நட்பின் மூன்று நிலைகளைக் காட்டும் திருமறைநூல், உண்மை நட்பு, பொய் நட்பு, தீ நட்பு, நட்பின் பயன்கள்…எனப் பலவற்றைப் பற்றியும்; பேசுகின்றது. இவற்றைப் பிற்பகுதியில் விரிவாகக் காணுமுன் திருக்குறளில் நட்பு பெறும் இடத்தைக் காண்பது நலமாகும்.

திருக்குறளில் நட்பு :

அறம் பொருள் இன்பம் என்று  மூன்று பால்களில் 133 அதிகாரங்களாகப் பிரிக்கப் பட்ட திருக்குறளில் 17 அதிகாரங்கள் நட்பியல் என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முதல் ஐந்து – நட்பு முதல் கூடா நட்பு வரை உள்ளவை –  நேரடியாகவே நட்பைப் பற்றிக் கூறுகின்றன ; பிற  பன்னிரண்டும் மறைமுகமாக அல்லது எதிர்மறையாக நட்பைக் குறிக்கின்றன(28). நட்பின் அருமை பெருமைகளையும் அதன் இயல்புகளையும் கூறும் வள்ளுவர், அத்தகைய நட்பை ஆராய்ந்து தேர்ந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘நட்பாராய்தல்’ என்றே ஓர் அதிகாரம் இயற்றி உள்ளார். பழக்கத்தால் நட்பு, உரிமையும் வலிமையும் பெறும் என்பது வள்ளுவர் கருத்து. இதனைப் ‘பழைமை’ என்ற அதிகாரம் உணர்த்தும்.. எது தீ(ய) நட்பு, எது கூடா நட்பு என்று விளக்கி அவற்றை விலக்க வேண்டிய தேவையைத்  ‘தீ நட்பு’, ‘கூடா நட்பு’ என்ற அதிகாரங்கள் தருகின்றன. நட்புகளிலேயே பெரிதும் இனிமை தருவது பேதைகளின் நட்புதான் என்று நையாண்டி செய்யும் வள்ளுவர் அதற்கான காரணத்தைக் கூறும் போது சிரிக்காமல் இருக்கமுடியாது(29). இதுபற்றிக் கூறுவதுதான் ‘பேதைமை’ என்ற அதிகாரம். இவை மட்டுமன்றி, அறத்துப்பாலில் வரும் 8 -ஆம் அதிகாரம் அன்புடைமையின் குறள் ஒன்று(30) நட்பு பற்றிப் பேசும். பொருட்பால் அரசியலில் இடம்பெறும் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்ற 45 -ஆம் அதிகாரத்திலும் நட்பு பற்றிய கருத்துகளைக் காணலாம். காதலர்க்கிடையே உள்ள நட்பின் பெட்பினைக் காமத்துப் பாலில் வரும் 1122 ஆம் குறள் கூறும்(31). இப்படி மூன்று பால்களிலும் இடம்பெறும் சிறப்பு நட்புக்கு மட்டுமே உண்டு.

அன்பும் நட்பும் :

இனி, திருமறைநூலின் திருவாக்குகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கு ஈடாக, இணையாகத் திகழும்  திருக்குறட் பாக்களை ஒப்புநோக்குதல் பேரின்பம் பயப்பதே! எந்த நட்புக்கும் அடிப்படையாக அமைவது அன்புதான். இந்த அன்பின் இயல்புகளை அழகாக அடுக்குவார் புனித சின்னப்பர் என்னும் பவுலடிகளார்(32) :” அன்பு பொறுமையுள்ளது, பரிவுள்ளது. அன்பு அழுக்காறு கொள்ளாது. பெருமை பேசாது, இறுமாப்பு அடையாது. இழிவானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது. சீற்றத்திற்கு இடந்தராது, வர்மம் வைக்காது. அநீதியைக் கண்டு மகிழ்வுறாது ; உண்மையைக் கண்டு உளம் மகிழும். அனைத்தையும் தாங்கிக்கொள்ளும்…அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும், அன்புக்கு என்றும் முடிவு இராது.” இவை யாவற்றையும் உள்ளடக்கி ‘அன்பின் வழியது உயிர் நிலை’ (33) என ஒரு வரியில் வள்ளுவர் கூறிவிடுவார். நட்பை ஈனுவது இத்தகைய அன்பே என்பது வள்ளுவர் அறுதியிட்டுக் கூறும் முடிவாகும்(34). அதுமட்டுமல்ல, இந்த அன்பு கனிந்து முதிர்ந்து தாயாகி ‘அருள்’ என்னும் குழந்தையை ஈன்றெடுக்குமாம் என்ற கருத்துப்பட, ‘அருளென்னும் அன்பீன் குழவி’ (குறள் 757) என்பார் வள்ளுவர்.

மனிதன் மனிதனுக்குக் காட்டும் அன்பு நட்பாக மலருகிறது ; மனிதன் இறைவனிடம் வைக்கும் அன்பு பக்தியாக முகிழ்க்கிறது. திருச்சட்டத்தின் பெரிய கட்டளை இந்த மனித நேயமும் இறைநேயமும் தான் என்பார் எம்பெருமான் ஏசு பிரான்(35). முன்பின் அறிமுகம் இல்லாத அயலவன் மீது அன்பு செய்வதுதானே மனித நேயம். இந்த மனித நேயத்தை நல்ல சமாரியன் கதை மூலம்(36) உணர்த்தும் ஏசு பிரான், அறிமுகமாகிப் பழகிப் பழுத்த  நட்பின் உச்சிநிலையைச் சுட்டிக்காட்டுகிறார் :

”தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எவனிடமும் இல்லை”(37).

இதே கருத்தை வள்ளுவர் சற்றே மாற்றிக் கூறுவார் : ”தன் இறப்பு தன்னைப் பேணிப் பாதுகாத்தவர்களின் கண்களில் கண்ணீரைத் தருமானால் அத்தகைய இறப்பைக் கெஞ்சிக் கேட்டாவது ( பிச்சை எடுத்தாவது) பெற்றுக்கொள்வது பெருமை தரும்”(38). வள்ளுவர் பயன்படுத்தும் ‘புரந்தார்’ என்ற சொல்லுக்கு (பேணிக்காத்த) நண்பர்கள் எனப்பொருள் கொண்டால்,  இறைமகன் ஏசு கூறிய கருத்து இதில் அப்படியே எதிரொலிக்கக் காணலாம்.

கண்ணீரும் அன்பும் :

அனைவர் மீதும் அன்பு செலுத்திய ஏசு பெருமான், பெத்தானியா என்ற ஊரின் லாசர் என்பவன் மீதும் அவன்  குடும்பத்தினர் மீதும் மிகுந்த நட்பு வைத்திருந்தார்(39). ‘அவன் இறந்த போன செய்தி கேட்டு அங்கு  எழுந்தருளும் ஏசு, அவன் சகோதரி மரியாள் அழுவதையும் அவளொடு வந்த யூதர் அழுவதையும் கண்டு மனம் குமுறிக் கலங்கிக் கண்ணீ விட்டார்’(40).  எருசலேம் நகரின் மீதும் ஏசுவுக்கு அளப்பரிய அன்பும் நட்பும் உண்டு. தம் இறுதி நாளில் இறுதி முறையாக எருசலெம் நகருக்கு வருகிறார் எம்பெருமான். ”அவர் அந்நகரை நெருங்கியபோது அதைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டுப் புலம்பினார்” என்று லூக்கா நற்செய்தி அறிவிக்கிறது(41). திருமறை நூலில் ஆயிரக்கணக்கான வசனங்கள் உண்டு ; அவற்றுள் மிகச் சிறிய வசனம் இதுவே.
கசையடி பட்டபோதும் கலங்கிக் கண்ணீர் விடாத கர்த்தர் ஏசு, இந்த இரண்டு இடங்களில் மட்டும்தான் அழுததாகத் திருவிவிலியம் கூறுகிறது. இந்தக் கண்ணீருக்குக் காரணம் அவருடைய அன்பும் நட்பும் தாம். இந்த இரு நிகழ்ச்சிகளுக்கு அப்படியே பொருந்தும் குறள் இதோ :

”அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்’(42)

நட்பாராய்தல் :

நட்பு, நட்புணர்ச்சி, தீநட்பு, கூடா நட்பு என்று பரவலாகப் பல இடங்களில் பேசும் திருமறைநூல், ஓரிடத்தில் இவை யாவற்றையும் ஒரு சேரக்(43) குறிப்பிடுகிறது. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிக்கக் கவனம் தேவை என்பதை,

”…நண்பன் வேண்டியிருக்கும் போது அவனை நன்கு ஆராய்ந்து தெரிந்துகொள்.’
என்று எச்சரிக்கிறது சீராக் ஆகமம்(44) ; இதே கருத்தைத்தான் திருக்குறளும்,
” ஆராயாமல் நட்புச் செய்வதைப்போல் கெடுதியானது வேறு இல்லை”(45) எனவும்
”ஆராய்ந்து, ஆராய்ந்து நட்பு கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்”(46) என்றும் குறிப்பிடுகிறது.
நட்பைப் பல படியாக அலசி ஆராயும் சிராக் ஆகமம் அடுத்துத் தரும் அறிவுரை :
”எளிதாய் அவன் மீது நம்பிக்கை வைக்காதே”
வள்ளுவரோ, ஒரு படி மேலே போய், நண்பன் மட்டுமல்ல எவரையும் ஆராயாமல், தெளியாமல் பழகுவது நீங்காத் துன்பத்தைத் தரும் என்கிறார்(47).

கூடா நட்பு :

கூடா நட்புப் பற்றிக் கூற வரும் சீராக் ஆகமம், ”…தன்னலத்தை நாடும் நண்பனும் உண்டு ; …பகைவனாய்த் திரும்பும் நண்பனும் உண்டு ; …பந்தியில்  அமர்ந்து சாப்பிடும் நண்பனும் உண்டு…” இத்தகையோர் நட்பினைத் திருக்குறள், ‘உறுவது சீர்தூக்கும் நட்பு”(48), ”அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்”(49), ”சிறியவர் புன்கேண்மை” (50)என்று பல சொற்களால் புலப்படுத்தும்.

இத்தகைய கூடா நட்பினை ஏன் விலக்க வேண்டும் என விளக்குகிறார் சீராக் ஆகம ஆசிரியர் : ‘…அவன் உன் துன்ப காலத்தில்  நிலைத்திருக்க மாட்டான் ; …அவன் ஆபத்துக் காலத்தில் நிலைப்பவனல்லன்”(51). இந்தத் தன்மை உடையோர் நட்பைத்தான் ‘கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை’ (52) என்கிறார் வள்ளுவர். உலக இயல்பே இதுதான் : ”நாம் சிரிக்கும் போது உலகமே நம்மோடு சேர்ந்து சிரிக்கிறது! ஆனால் நாம் அழும்போதோ, தனியாகத்தான் அழவேண்டி இருக்கிறது” என்று அமெரிக்க எழுத்தாளர் எல்லா வீலர் வில்காக்ஸ் கூறுவார் (53) . இதே கருத்தைத்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர், ‘துன்பத்திற்கு யாரே துணை ஆவார்?” (54) எனக் கூறிவிட்டார்.

நட்பின் பண்பு :

இதனால், துன்ப காலத்தில் துணை இருப்பதே நட்பின் பெட்பு, இடுக்கண்  வரும்போது உடனிருந்து உதவுவதே நட்பின் சிறப்பு என்பது பெறப்படும். இதுவே உண்மையான நட்பு ; நட்பின் தலையாய பண்பு. இதனை இரண்டு குறள்களில் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கிறார் வள்ளுவர் :

”உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், (நண்பனுக்குத் துன்பம் வந்தால் ) அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.” (55)
இதில் நட்பின் இலக்கணம் கூறப்படுகிறது. எப்போது இந்த நட்பு அரியணை ஏறிச் சிறப்பாக வீற்றிருக்கும் என்பதை அடுத்த குறளில் காணலாம் :

‘நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்று நிலை”(56)
“Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances (57)–  Rev W.H. Drew and Rev John Lazarus என்ற இருவரும் அழகாக மொழிபெயர்ப்பார்கள். இத்தகைய பண்பினை உடைய நண்பனை, ‘உறுதியாய் நிலைத்திருக்கும் நண்பன்’ எனச் சீராக் ஆகமம்(58) அழைக்கும். இந்த நட்பின் உறுதியைத்தான் அதிவீரராம பாண்டியர்,
”ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க்குமே”(59)
என்று பின்னாளில் பாடுவார்.

நட்பின் பெருமை :

இத்தகைய நண்பனை அடைந்தவன் பேறு பெற்றவன் ; ஏனெனில், ‘நம்பிக்கை உள்ள (இந்த) நண்பன் பலமான காவலுக்குச் சமம் ; அவனைக் கண்டடைந்தவன் செல்வத்தைக் கண்டவன் போலாவான் ; நம்பிக்கையுள்ள  நண்பனுக்கு ஒப்பு ஒன்றும் இல்லை ; அவனது நம்பிக்கைக்கு எந்த அளவு பொன்னும் வெள்ளியும் நிகராகா’(60). சீராக்கின் இந்தக் கருத்தை அப்படியே எதிரொலிக்கிறார் வள்ளுவர் ; இத்தகைய நட்பைவிடச் சிறந்தது எதுவும் இல்லை என்பது வள்ளுவரின் கருத்து கூட. அதனால்தான்,
‘செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
நினைக்கரிய யாவுள காப்பு?’(61)
என்கிறார் நம் நாட்டுத்  தெய்வப் புலவர்.

நம்பிக்கையுள்ள நண்பனை வாழ்வு தரும் மருந்துக்கு ஒப்பிடுவார் சிராக் ஆகம ஆசிரியர்(62). வள்ளுவரோ, நல்லார் நட்பினை நூல் நயத்துக்கு ஒப்பிட்டுக் காட்டுவார்(63). இந்த நல்ல நட்பு, பிறை நிலவு போல நாளும் வளரும் என்று  திருக்குறள் கூறும்(64).

நட்பின் பயன்கள் :

இப்படி வளரும் இந்த நட்பின்;; (அடிப்படையான) பெரும் பயன் என்ன? மூன்று  பயன்களைக் குறிப்பிடுகிறது திருக்குறள் :
‘அழிவின் அவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு’(65)

அழிவின் அவைநீக்கல் :

.முதல் பயன், அழிவின் அவை நீக்கி, (முன்னர்  குறிப்பிட்டபடி) இடுக்கண் களைதலே ஆகும். துன்பம் சூழும் வேளையில் நண்பன் ஓடி வந்து உதவுவான் ; அல்லது அவனை நாடிச் செல்லலாம.; ஆகவேதான், பழமொழியாகமம்  ‘நண்பன் எக்காலமும் நேசிக்கிறான், துன்பத்திலேயும் சகோதரனாவான்’(66) என்றும் ‘…இடுக்கண் வரும்காலத்தில் உடன்பிறந்தான் வீடடிற்குச் செல்லாதே ; தொலையிலிருக்கும்  உடன்பிறந்தாரை விட அண்மையிலிருக்கும் நண்பரே மேல்’ (67) என்றும் கூறுகிறது.  ‘A friend in need is a friend indeed’ என்று ஆங்கிலத்தில் பழமொழி ஒன்று வழங்குகிறதைக் காண்க. உதவி தேவைப்படும்போது நண்பன் வீட்டுக் கதவைத் தட்டிக் கேட்கலாம் ; தொல்லைப் படுத்தியும் கேட்கலாம் என்று சொல்லும் எப்பெருமான் ஏசு பிரான், ‘…விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்’ (68) என்கிறார்.

பகை அரசர்கள் சொதொம் கொமோரா மீது படையெடுத்து வந்து அம்மக்களின்  சொத்துகள் முழுவதையும் உணவுப் பொருட்கள் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு போனார்கள். அத்துடன் சொதோமில் வாழ்ந்தவனும் ஆபிராமின் சகோதரன் மகனுமாகிய லோத்தையும் அவன் சொத்துகளையும் கைப்பற்றிப் போனார்கள். லோத்துக்கு நேர்ந்த துன்பம் பற்றி அறிந்த ஆபிராம் (அபிரகாம் ) ஓடோடி வந்து உதவுவதைத் திருமறைநூல் காட்டும் போது, முன் குறிப்பிட்ட திருக்குறளின் ‘அழிவின் அவைநீக்கி’ என்ற சொற்றொடொருக்கு விளக்கம் தருவது போல உள்ளது. லோத்துக்கு ஏற்பட்ட அழிவை நீக்கி ‘அப்படி (அபிராம்) அவர்களின் எல்லாப் பொருட்களையும் தன் சகோதரனான லோத்தையும் அவன் சொத்துக்களையும் பெண்களையும் மக்களையும் திருப்பிக்கொண்டு வந்தான்” என்று கூறுகிறது ஆதியாகமம் (69). இதுவே ‘உடுக்கை இழந்தவன் கை போல இடுக்கண் களையும் நட்பு’.

ஆறுய்த்தல் :

நட்பின் இரண்டாம் பயன், ஆறுய்த்தல். அதாவது தக்க நேரத்தில் தக்க ஆலோசனைகள் சொல்வதும் மிகுதிக் கண் மேற்சென்று இடித்துக் கூறுதலும் ஆகும். நறுமணத் தைலத்தாலும் வெவ்வேறு நறுமணப் பொருட்களாலும் இதயம் அக்களிப்பதைப் போல, ஆன்மா, நண்பனின் நல்லாலோசோனைகளால் அக்களிப்பதாகத் திருமறை நூல் சொல்கிறது(70). ‘முகஸ்துதி செய்து படுகுழியில் தள்ளுபவர்கள் உண்மை நண்பர்கள் அல்லர். ஒற்றைக் கொம்பு விலங்குகளுக்கு அவற்றின் கொம்புகளே அழிவைத் தேடித் தரும் ; அதுபோல மனிதர்களுக்கு முகஸ்துதி’ என்பார் ஷேக்ஸ்பியர்(71). இப்படி முகஸ்துதி செய்யும் பகைவர்களின் வஞ்சக முத்தங்களை விட நண்பர்கள் தரும் காயங்களே அதிக நலமானவை’ (72) ; ‘… உன்னைப் புகழ்ந்து ஏமாற்றப் பார்த்தாலும் இணங்காதே’ (73) என்பன திருமறைநூலின் பொருளாழம் மிக்கத் திருவாக்குகள். இவற்றை எல்லாம்  உள்ளடக்கியே, வள்ளுவர்; இனி வருமாறு கூறுகிறார் :

‘நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் டித்தற் பொருட்டு’(74)

அல்லல் உழத்தல் :

மூன்றாவது பயன், அழிவின் கண் அல்லல் உழப்பது. இதனை இக்காலத்தமிழில் உறுதிப்பாடு, பிரமாணிக்கம் எனலாம். துன்பம் வந்து சூழ்ந்த பிறகும் விட்டு விலகாமல் எத்துன்பத்திலும் பங்கு கொள்ளும் பாங்கு உண்மை நட்புக்கே உண்டு. இந்த நட்புக்கு இலக்கணமாய் விளங்குகிறார்கள் இருவர் : மாமியார் நோயேமியும் மருமகள் ரூத்தும். நோயேமியின் கணவன் எலமெலேக் மறைந்தான் ; அவள் மகன்கள் இருவரும் இறந்தனர். வறுமையின் வாட்டத்திலிருந்து விடுபட இயலாமல் தத்தளித்த அவள் தன் மருமகள்களைத் தத்தம் தாய் வீடுகளுக்குத் திரும்பிப் போகுமாறு பணிக்கிறாள். இருவரும் அழுகின்றனர். அவள் மீண்டும் வற்புறுத்தவே, மருமகள் ஓர்பா மாமியை முத்தமிட்டுத் தன் வீடு திரும்பினாள். ஆனால் ரூத் தன் மாமியை விட்டுப் பிரியவில்லை. நோயேமி அவளைப் பார்த்து, ‘இதோ! உன் உறவினள் தன் இனத்தாரிடம் போய்விட்டாளே ; நீயும் அவளோடு போ’ என்றாள். அதற்கு ரூத் கூறும் பதில் அவளுடைய உறுதிப் பாட்டை, அவளுடைய பிரமாணிக்கத்தை உணர்த்துகிறது : ‘நான் உம்மை விட்டுப் போகும்படி இன்னும் என்னைத் தூண்ட வேண்டாம். நீர் எங்குப் போனாலும் நானும் வருவேன்.நீர்  எங்குத் தங்குவீரோ அங்கே நானும் தங்குவேன். உங்கள் இனமே என் இனம் ; உங்கள் கடவுளே எனக்கும் கடவுள். நீர் எந்தப் பூமியில் இறந்து புதைக்கப் படுவீரோ அதே பூமியில் நானும், இறந்து புதைக்கப்படுவேன். சாவு ஒன்றே உம்மையும் என்னையும் பிரிக்கும்(75). ‘ பிரமாணிக்க நட்புக்கு அருமையான எடுத்துக்காட்டு ரூத்தின் வாய்மொழிகள.;

கைவிடுவார் நட்பு :

எம்பெருமான் ஏசு பிரான் எத்தனையோ பேர்களிடம் பழகினார் ; எவ்வளவோ பேரிடம் நட்பு பாராட்டினார்! இறுதியிலே அவர் சிலுவையிலே தொங்கும் போது அவரைச் சுற்றி எத்தனை பேர் இருந்தனர்? ‘ஆண்டவரே, உம்மோடு சிறைக்கும் சாவுக்கும் உள்ளாக ஆயத்தமாய் இருக்கிறேன்’ (76) என்று மார் தட்டி வீராவேசமாய் முழங்கிய இராயப்பர் முதல் ஏனைய சீடர்கள் வரை (அருளப்பர் நீங்கலாக) ஐயனை விட்டு அகன்று போயினர் ; ‘கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மைக்கு’ எடுத்துக்காட்டாயினர். ஆனால், அவரின் அன்புச்சீடரும் ‘அவருடைய தாயும் அவர் தாயின் சகோதரியும்  கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும் மதலேன் மரியாளும் இயேசுவின் சிலுவையருகில் நின்றுகொண்டிருந்தனர்’(77). எனவே, ‘அழிவின்கண் அல்லல் உழக்கும் நட்பினை’ இவர்களிடம் மட்டுமே காணமுடிகின்றது.

தனக்கும் இத்தகைய நிலைமை நேர்வதைப் பவுலடிகளார் கூறுகிறார். (அருளப்பரைப் போல) ‘லூக்கா மட்டும் என்னுடன் இருக்கிறார்’ என எழுதினாலும் அடுத்த பத்தியில், ‘நான் முதல் விசாரணையில் என் வழக்கை எடுத்துச் சொன்ன போது, எனக்குத் துணை நிற்க யாரும் முன் வரவில்லை. எல்லாரும் என்னைக் கை விட்டனர்’ (78) என்கிறார் அவர். ‘கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மைக்கு’ இஃது இன்னுமோர் எடுத்துக்காட்டாகிறது.

துன்பத்தில் துணைநிற்கும் நட்பு :

துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்கும் நண்பர்களையும் காட்டாமல் இல்லை திருமறைநூல். நட்பின் நெருக்கத்தையும் இறுக்கத்தையும் காட்டுகிறது யோனத்தாசு – தாவீது வரலாறு(79). யோனத்தாசின் மரணத்தை அறிந்த தாவீது கதறி அழுது மாலை வரை நோன்பு காத்தார் ; அவன் மறைவை எண்ணிப் புலம்பும் தாவீது, ”தம்பி, யோனத்தாசு! உனக்காகத் துயரப்படுகிறேன். நீ பேரழகனும் பெண்களை விடப் பேரன்பனுமாய் இருந்தாய்! ஒரு தாய் தன் ஒரே மகனுக்கு அன்பு செய்வது போலன்றோ நான் உனக்கு அன்பு செய்தேன்’என்கிறார்(80). இத்தகைய நட்பை விளக்கத்தான், வள்ளுவர்,

‘———-  ———-  ———-  உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்’ (81) ; என்றும்
‘———-  ———-  ———-  நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு’ (82) என்றும்
உரைத்தார் போலும்.

துன்பததைத் தரும் நட்பு :

சிரித்துச் சிரித்தே கழுத்தை அறுக்கும் நண்பர்களும் உலகிலே உண்டு. அத்தகைய நண்பர்களைப் பற்றிச் சங்கீத ஆசிரியர் புலம்புகிறார் : ” என் எதிரி என்னை நிந்தித்திருந்தால் அதைப் பொறுத்துக்கொண்டிருப்பேன். என்னைப் பகைத்தவன் எனக்கு எதிராய்க்  கிளர்ந்து எழுந்தால் அவனிடமிருந்து தப்பியோடி ஒளிந்திருப்பேன்,  ஆனால், என் தோழன் நீயே, என் நண்பனும் உயிர்த் தோழனுமான நீயே என்னை எதிர்த்தாய்!’ (83) இப்படி, ‘முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்சவேண்டும்’ (84) என்கிறது திருக்குறள். ஏனெனில் இத்தன்மையோரின் ‘தொழுத கையுள்ளும் படையெடுங்கு’மாம் (85). புரூட்டசின் தொழுத கையுள் ஒடுங்கிய படைதானே மாவீரன் ஜுலியஸ் சீசரை மண்ணிலே மாய்த்தது (86)! கோட்சேயின் தொழுத கையில் இருந்த துப்பாக்கிதானே மகாத்மா காந்திக்குக் குண்டடி கொடுத்துச் சாய்த்தது! அதனால்தான் வள்ளுவர்,
‘வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு’ (87) என்றார்

வஞ்சக நட்பும் வாழ்வினில் உண்டு எனக் காட்டிய திருமறை வசனங்கள், பணம், செல்வம் போன்ற உள்நோக்கோடு கூடிய நட்பையும் காட்டுகின்றன : ‘செல்வர்க்கு நண்பர் பலராம்’ (88), ‘செல்வம் மிகுதியான நண்பர்களைச் சேர்க்கும்’ (89), ‘நன்கொடை கொடுப்பவர்க்கு நண்பர் உண்டு’ (90). இத்தகைய நட்பை வள்ளுவர் ‘உறுவது சீர்தூக்கும் நட்பு’ (91) என்பார்.

இடிப்பாரை இல்லாத நட்பு :

உலகிலே நடைபெறும் நியாய அநியாயங்களைத் திருமறைநூல் ஒளியாமல் உரைக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் தாவீதின் மகனான அம்னோன் செய்த அநீதச் செயல். இவனுடைய ஒன்றுவிட்ட சகோதரி தாமார் என்ற பேரழகி மீது முறை தவறிய மையல் கொள்ளுகிறான் இவன். இவனுக்கு ஒரு நண்பன். பெயர் : யோனதாப். பெரும் தந்திரசாலி. அம்னோனின் மையலை அறிந்த யோனதாப் அவனைக் கண்டித்து நல்ல வழியில் செலுத்தாமல், தாமாரைக் கற்பழிப்பதற்கு வழி சொல்லித் தருகிறான். அந்தத் தந்திர வழியைக் கடைபிடித்து அம்னோன் தாமாரைக் கற்பழித்துவிடுகிறான். தீ நட்புக்கும் கூடா நட்புக்கும் எடுத்துக்காட்டாய் இந்த நிகழ்ச்சியைத் தருகிறது திருமறைநூல். இதற்கு எதிர்மறையான கருத்தை வள்ளுவர் நட்பாராய்தல் என்ற அதிகாரத்தில், ‘நன்மை அல்லாத செயலைக் கண்ட போது வருந்தும் படியாக இடித்துச் சொல்லி உலக நடையை  அறிய வல்லவரின் நட்பை ஆராய்ந்து கொள்ளவேண்டும்” (92)
என்றுரைக்கிறார். இந்தக் குறள் மட்டும் அம்னோனுககுத் தெரிந்திருந்தால் அவன் தன் தீய நட்பை விலக்கி இருப்பான் ; அல்லது, யோனதாப் படித்திருந்தால் நண்பன் வருந்தும் படியாக இடித்துச் சொல்லி அவனை நல்வழிப் படுத்தி இருப்பான்.

வருத்தம் தரும் நட்பு :

ஆறுதல் கூறுவதாக எண்ணிக்கொண்டு மனப்புண்ணைக் கீறிவிடும் நண்பர்களும் உண்டு என்கிறது திருமறைநூல். சாத்தான், யோபுவை உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரையில் அருவருப்பான அழிபுண்களால் வாதித்தான். யோபுவின் மூன்று நண்பர்கள் – தேமானியனான ஏலிப்பாஸ், சுகீத்தனான பால்தாத், நாகாமத்தீத்தனான சோப்பார் ஆகியோர் யோபுவுக்கு நேரிட்ட இந்தத் தீமைகளை எல்லாம் கேள்விப்பட்டு அவரைக்கண்டு ஆறுதல் சொல்லும்படி… தத்தம் ஊரிலிருந்து புறப்பட்டு வந்தனர்… அவருக்கு நேர்ந்த துன்பம் மிகவும் கொடியது எனக் கண்டு, ஒருவரும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் ஏழு இரவும் ஏழு பகலும் அவரோடு கூடத் தரையில் உட்கார்ந்திருந்தனர் (93). பின்னர், ஒவ்வொருவராக யோபுவோடு (வி)வாதம் செய்கின்றனர் ; யோபு தன் மறுமொழியில், ‘நீங்கள் யாவரும் துயர் தரும் தேற்றரவாளர்களே’ (94) என்று வருத்தப்படுகிறார். மேலும், ‘இன்னும் எவ்வளவு நேரம் என்னை வதைப்பீர்கள்? வார்த்தைகளால் என்னை நொறுக்குவீர்கள்? (95) என்று கேட்கிறார். இந்த மூன்று நண்பர்கள் பேதமையாலும் நட்புரிமையாலும் இப்படிப் பேசுகின்றனர். இதனைத்தான் வள்ளுவர், ‘வருந்தத் தக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் , அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்’ (96) என்கிறார்.

இரகசியத்தைக் காக்கும் நட்பு :

பழமொழி ஆகமம் 11-ஆம் அதிகாரம் 13 -ஆம் வசனத்தில், ‘வஞ்சனையாய் நடக்கிறவன் இரகசியங்களை வெளியாக்குகிறான் ; பிரமாணிக்கமுள்ளவனோ தன் நண்பனின் இரகசியத்தை மறைக்கிறான்” என்று கூறுகிறது திருமறைநூல். ‘குற்றத்தை மறைக்கிறவன் நட்பைத் தேடுகிறான்’ (97) என்பதும்; திருமறைநூலின் திருவசனமே. ‘பொருளதிகாரம் குடியியல் 98 -ஆம் அதிகாரம் 980 -ஆம் குறளில் இந்தக் கருத்துகள் உள்ளன : ‘பெருமைப் பண்பு பிறருடைய குறைபாட்டை மறைக்கும் ; சிறுமையோ, பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும் (98) ; ” இதில் நட்பு பற்றிய குறிப்பு இல்லை என்றாலும் மேற்காட்டிய வேத வசனங்களுக்குப் பொருத்தமாக அமைகிறது இக்குறள்.

இறைவன் (மீது) அன்பு :

மனிதன் மற்றொரு மனிதனுக்கு நண்பனாதல் போலவே, மனிதன் இறைவனுக்கும் இறைவன் மனிதனுக்கும்  நண்பனாக விளங்குவது உண்டு எனத் திருமறைநூல் காட்டும் (99). இசையாஸ் ஆகமம் 41 -ஆம் அதிகாரம் 8-ஆம் திருவசனத்தில், ‘நம் அன்பன் ஆபிரகாம்’ என்று கடவுள் நட்பு பாராட்டுகிறார். ‘அபிரகாம் கடவுளை விசுவசித்தார் ; அதனால் கடவுள் அவரைத் தமக்கு ஏற்புடையவர் என மதித்தார்… மேலும் அவர் கடவுளின் நண்பன் எனவும் அழைக்கப் பெற்றார்” (100) என யாகப்பர் தம் திருமுகத்தில் எழுதி இருக்கிறார். இத்தகைய நட்பினை வள்ளுவர் எங்கேயும் காட்டவே இல்லை. மாறாக, இந்தத் தெய்வீகத் தோழமையைச் சுந்தரரின் தேவாரப் பாடல்களில்தான் முதன்முதலாகக் காணுகிறோம்.

சமூகத்தின் எல்லா மட்டத்திலும் இருந்த மக்களை ஏற்றுக்கொண்ட இறைமகன் ஏசுபிரான், இத்தகைய தெய்வீகத் தோழமையைப் பல இடங்களில் காண்பிக்கிறார். அவருடைய சீடர்களில் ஒருவரை அவர் மிக மிக நேசித்திருக்கிறார் என்பதை அருளப்பர் நற்செய்தி மூன்று இடங்களில் குறிப்பிடுகிறது. (101)
அவருக்கும் லாசருக்கும் இருந்த நட்பின் நெருக்கத்தையும் அதே நற்செய்தியில் (102) காணலாம். தம் சீடர்களையும் அவர் தம் நண்பர்களாகவே மதித்தார் (103) :

‘ நான் உங்களுக்குக் கட்டளை இட்டதெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்கள்… உங்களை இனி ஊழியர் என்று சொல்லேன்… ஆனால் உங்களை நண்பர்கள் என்றேன் (104).
இத்தகைய கிறித்துவ அன்பினைத்தான் நட்பினைத்தான் அவர் சீடர்கள் நற்செய்தி வாயிலாக உலகெங்கும் பரப்பினார்கள். ‘உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள் ; உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள் (105) ; ” என்பது எம்பெருமான் ஏசுபிரான் அடிக்கடி வலியுறுத்திய கருத்து. இதே கருத்தை வலியுறுத்தும் வள்ளுவர், ‘பகைவரையும் நட்பாக்கி வாழும் பெருமை மிக்கோரால் உலகம் நிலைபெறுகிறது’ (106) என்கிறார். ஆகவே, பகைவர்களுக்கு அன்புசெய்வதோடு, அன்பு செய்வதால் அவர்களை நண்பர்களாகவும் மாற்றிக்கொள்ளலாம், தோழர்களாகவும் ஏற்றுக்கொள்ளலாம் என்று திருக்குறள் உணர்த்துகிறது.

முடிவுரை :

பல வேறு காலங்களில், பலப்பல ஆசிரியர்களால் எழுதப்பெற்றுத் தொகுக்கப்பட்ட தொகை நூல்தான் திருமறைநூல் – ஆலமரம் போன்றது. ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகட்கு முன் ஒருவரால் எழுதப்பட்ட திருக்குறளோ, ‘தெள்ளிய  ஆலின் சிறுபழத்தொரு விதையாக’ விளங்குவது. இந்த இரண்டுமே நட்பைப் பற்றிப் பல கருத்துகளை, நடைமுறை வாழ்வுக்கு நன்கு பயன்படும் கருத்துகளைக் கூறுகின்றன. திருமறைநூல் குறிப்பிடாத சிலவற்றைத் திருக்குறள் சொல்லுகிறது ; திருக்குறள் தொடாத சிலவற்றைத் திருமறைநூல் உரைக்கிறது. இவற்றை இக்கட்டுரை சுட்டிக்காட்டவில்லை. ஆனாலும் இவ்விரண்டு நூல்களும் நட்பைப் பற்றிக் கூறுங் கருத்துகளை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் சுருக்கிக் கூறியுள்ளவற்றை விரிக்கின் பெருகும்.

உதவிய நூல்களின் பட்டியல்

–         Baker’s Evangelical Dictionary of Biblical Theology

(cf http://www.annieshomepage.com/frienshipbible.html)
–    பரிசுத்த வேதாகமம் – திருத்திய பதிப்பு,
(விவிலிய மறைக்கல்வி திருவழிபாட்டு நடுநிலையம், திண்டிவனம்)

–    திருவிவிலியம் பொதுமொழிபெயர்ப்பு –          TNBCLC, Tindivanam
–    திருக்குறள் : பரிமேலழகர் உரை, வானதி பதிப்பகம்
–    திருக்குறள் : திருக்குறள் தெளிவுரை, டாக்டர் மு.வரதராசனார்
–    திருக்குறள் : மனித நேய உரை- புலவர் அரிமதி தென்னகன்
–       Thirukural  : English translation  by  Rev. W.H. Drew and Rev. John Lazarus
–    நன்னுhல் – காண்டிகையுரை
–      The Complete works of Shakespeare – The Bath press, Bath (UK)
–   The International Dictionary of Thoughts – Doubleday –Ferguson & Co., Chicago
________________________________________________________________________________
அடிக்குறிப்புகள் :

 1. Baker’s evangelical dictionary of Biblical Theology (cf  http://www.annieshomepage.com/friendshipbible.html)
 2. II கொரிந் 8:16-24 ; 1தீமோத் 1:18 ; பிலோமொன் 1:2, 10
 3. உரோ. 1 : 14 ; 10:1 ; 12:1 ; 15:1…
 4. குறள் 74
 5. குறள் 781, 782, 785, 786, 787, 788, 789, 790, 793, 794, 795, 798, 800…
 6. குறள் 791
 7. குறள் 679, 804, 805, 808
 8. குறள்  783, 806, 819, 820
 9. குறள் அன்புடைமை அதிகாரம் 8 குறள் 4
 10. ”… ணளமுன் டணவும் ஆகும்…” – நன்னூல் மெய்யீற்றுப் புணரியல் சூத்திரம் 237
 11. அறத்துப்பால் : அன்புடைமை அதி.8 குறள் 4 ; பொருட்பால் : நட்பு அதி. 79, நட்பாராய்தல் அதி.80…   காமத்துப்பால் : காதற் சிறப்புரைத்தல அதி. 113 குறள் 1122.
 12. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை  வெல்லுஞ் சொல்லின்மை அறிந்து.- பொருளியல், அமைச்சியல், சொல்வன்மை அதி.65 குறள் 645
 13. மத் 22:12, 26:50
 14. மத் 20:13
 15. II சாமு 15:19-22
 16. II சாமு 15:32-.37
 17. II சாமு 16:16-19 ; ஐஅரசர் 4:;5 ; ஐமக்கபே 2:18 ; ஐமக்கபே 6:10
 18. பழ.18:24 (திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு பக்கம் 960 : ”கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு ;  உடன்பிறந்தாரை விட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமண்டு”
 19. அரு. 19:12 ”நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பனாய் இருக்க முடியாது”
 20. 1அரசர் 1:5 ‘ஈராம் என்றும் தாவீதின் நண்பனாய் இருந்துவந்தான்’
 21. 1அரசர் 1:12 ‘ஈராமுக்கும் சாலமோனுக்கும் இடையே அமைதி நிலவிற்று ; இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டனர்.’
 22. 1சாமு 18:1
 23. 1சாமு 18:3
 24. 1சாமு 20:14-17
 25. பிலிப். 1:7
 26. பிலிப். 4:1
 27. அரு.15:13
 28. ‘ஐந்து அதிகாரம்; விதிமுகத்தானும் பன்னிரண்டு அதிகாரம் எதிhமறை முகத்தானும் கூறுவான்…” அதிகாரம் 79  நட்பு – பரிமேலழகர் உரை. வானதி பதிப்பகம் பக்கம் 313
 29. பேதைமை அதிகாரம் 84 -நட்பியல,; பொருட்பால் — திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு.வரதராசனார் பக்;; 171
 30. ‘அன்பீனும் ஆர்வ முடைமை அஃதீனும்   நண்பெனும் நாடாச் சிறப்பு’- அறத்துப்பால், இல்லறவியல் 74 ஆம் குறள்
 31. ‘உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன   மடந்தையொ டெம்மிடை நட்பு’ – பொருட்பால், களவியல், ‘காதற் சிறப்புரைத்தல்’
 32. I கொரி.13:4-8
 33. குறள் 80 அறத்துப்பால், இல்லறவியல் 8-ஆம் அதிகாரம் ‘அன்புடைமை’
 34. அடிக்குறிப்பு 30 காண்க.
 35. மத். 23: 37-40
 36. லூக். 10:25-28
 37. அரு.15:13
 38. ‘புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு  இரந்துங்கோட்  டக்க துடைத்து’ பொருட்பால், படையியல் 78 ஆம் அதிகாரம் படைச்செருக்கு குறள் 780.
 39. அரு. 11:5
 40. அரு. 11:35
 41. லூக். 20:41
 42. குறள் 71 அறத்துப்பால், இல்லறவியல் 8 -ஆம் அதிகாரம் : ‘அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்’- திருக்குறள் தெளிவுரை, டாக்டர் மு.வரதராசனார் பக்கம் 16
 43. சீராக் 6 :7-17
 44. அடிக்குறிப்பு 43 காண்க
 45. ‘நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்   வீடில்லை நட்பாள் பவர்க்கு.’ குறள் 791 திருக்குறள் தெளிவுரை, டாக்டர் மு.வரதராசனார் பக்கம் 162
 46. ”ஆய்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை   தான்சாந் துயரந் தரும்” குறள் 792 திருக்குறள் தெளிவுரை, டாக்டர் மு.வரதராசனார் பக்கம் 162
 47. ”தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்   தீரா இடும்பைத் தரும்” குறள் 510 அதிகாரம் 51 பொருட்பால், அரசியல்
 48. குறள் 813 ‘நட்பு அளவு பாராது அதனால் வரும் பயனளவு பாhக்கும் நட்டார்’ பரிமேலழகர் உரை
 49. குறள் 814 ‘நம்பி ஏறிவந்தாரைக் களத்தில் கவிழ்க்கும் குதிரை போன்றோர் நட்பு’ திருக்குறள் மனித நேய   உரை- புலவர் அரிமதி தென்னகன் பக்கம் 167
 50. குறள் 815 ‘கீழ் மக்களது தீ நட்பு’ – பரிமேலழகர் உரை
 51. சீராக் 6:8-10
 52. குறள் 799 – ‘கேடு வருங் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு’ திருக்குறள் தெளிவுரை, டாக்டர் மு.வரதராசனார் பக்கம் 163.  ‘டுயரபாஇ வாந றழசடன டயரபாள றiவா லழர ;
 53. றுநநிஇ லழர றநநி யடழநெ’ – நுடடய றுhநநடநச றுடைஉழஒ : வாந ஐவெநசயெவழையெட னுiஉவழையெசல ழக வுhழரபாவள  –     னுரடிடநனயல -குநசபரளழn ரூ ஊழஅpயெல ஊhiஉயபழ. Pயபந 428.
 54. குறள் 1299 – இனபத்துப்பால், கற்பியல், அதிகார; 130 ‘நெஞ்சொடு புலத்தல்’
 55. ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ குறள்  788இ  திருக்குறள் தெளிவுரை, டாக்டர் மு.வரதராசனார் பக்கம் 161.
 56. குறள் 789 பொருளியல், நட்பியல் அதிகாரம் 79 நட்பு
 57. Thirukkural –  English translation by Rev W.H. Drew and Rev John Lazarus page 159
 58. சீராக் 6:11
 59. வெற்றிவேற்கை பாடல் 34 – மு.ந. வேங்கடசாமி நாட்டார் உரை- வுயஅடை எசைவரயட ரniஎநசளவைல : றறற.வயஅடைஎர.ழசப
 60. சீராக் 6:14,15
 61. ‘நட்புக்கொள்வதை விடச் சிறந்த செயல் வேறில்லை ; அதைப்போல் காப்புத் தருவனவும் வேறில்லை”- குறள் 781 – திருக்குறள் மனித நேய உரை- புலவர் அரிமதி தென்னகன் பக்கம் 161
 62. சீராக் 6:16
 63. ” நவில்;தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்  பண்புடை யாளர் தொடர்பு” – குறள் 783 பொருட்பால் நட்பியல் அதிகார; 79 நட்பு
 64. ‘நிறைநீர நீரவர் கேண்மை’ – குறள் 782 பொருட்பால் நட்பியல் அதிகார; 79 நட்பு
 65. குறள் 787 -‘ நட்பின் துயர் நீக்கல், நல்வழிப் படுத்துதல், துன்பத்தில் பங்குபெறல் நல்ல நட்பாம’; திருக்குறள் மனித நேய உரை- புலவர் அரிமதி தென்னகன் பக்கம் 161
 66. பழ. 17:17
 67. பழ. 27:10 திருவிவிலியம் பொதுமொழிபெயர்ப்பு பக்கம் 971
 68. லூக். 11:8
 69. ஆதி.14:11-16
 70. பழ. 27: 9
 71. ‘…unicorns may be  betray’d with trees …and men by flatterers’ – Decius      ( Shakespeare : Julius Caesar Act II Sc I)
 72. பழ. 27:6
 73. பழ.1:10
 74. ‘நட்புச் செய்தல் …சிரித்து மகிழும் பொருட்டு அன்று ; நண்பர் நெறி கடந்த செல்லும் போது முற்பட்டுச்சென்று இடித்துரைப்பதாகும்’ குறள் 784 : திருக்குறள் தெளிவுரை, டாக்டர் மு.வரதராசனார் பக்கம் 160
 75. ரூத். 1:16-17
 76. லூக் 22:33
 77. அரு 19:25
 78. II தீமோத் 4:11 ; 4:16
 79. I சாமுவேல் 18:1-4 ; 20:14-17 ; 23:16-18
 80. II சாமுவேல் 1:26
 81. குறள் 785
 82. குறள் 786
 83. சங். 54:12-13
 84. ‘முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா  வஞ்சரை அஞசப் படும்’ – குறள் 824
 85. குறள் 828
 86. ‘Et tu Brute! Then fall Caesar!’ –Shakespeare, Julius Caesar, Act III Sc I
 87. குறள் 882- பொருட்பால், அங்கவியல் 89 ஆம் அதிகாரம் உட்பகை.
 88. பழ. 14:20
 89. பழ. 19:4
 90. பழ. 19:6
 91. குறள் 813 ‘கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பர்’ – திருக்குறள் தெளிவுரை, டாக்டர் மு.வரதராசனார் பக்கம் 166.
 92. ‘அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய  வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்’  குறள் 795 திருக்குறள் தெளிவுரை, டாக்டர் மு.வரதராசனார் பக்கம் 162.
 93. யோபு 2:11-13
 94. யோபு 16:2
 95. யோபு 19:2

‘பேதமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க   நோதக்க நட்டாh செயின்” – குறள் 805  திருக்

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*