மாற்றருஞ் சிறப்பின் மரபு : செ. சீனி நைனா முகம்மது, மலேசியா.

1. தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை

தொல்காப்பியம் தனது முதலதிகாரமான எழுத்ததிகாரத்தின் முதல் இயலுக்கே நூன்மரபு என்று தலைப்பிடுகிறது.    இதன் இரண்டாம் இயல் மொழிமரபு; ஐந்தாம் இயல் தொகைமரபு; சொல்லதிகாரத்தில் நான்காம் இயல் விளிமரபு. தொல்காப்பியத்தின் நிறைவதிகாரமான பொருளதிகாரத்தின் இறுதி இயலும் மரபியல் என்றே பெயர் பெறுகிறது. இதன் முதல் நூற்பா, மரபை ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று சிறப்பிக்கிறது; மற்றொரு நூற்பா ‘மரபுநிலை திரியின் பிறிதுபிறிதாகும்’ என்று விழிப்பூட்டுகிறது. இந்தத் தலைப்புப் பெயர்களும் செய்யுளடிகளும் தொல்காப்பியர், மரபுக்கு வழங்கியுள்ள சிறப்பிடத்துக்குச் சான்றுகளாக விளங்குகின்றன. பனம்பாரனாரின் பாயிரமும், “மயங்கா மரபு” என்று இதனை வழிமொழிகிறது.

அதேவேளை, அதிகாரங்களின் நிறைவிலும் இயல்களின் இறுதியிலும் பல இடங்களில் தொல்காப்பியர், தாம் கூறிய விதிமுறைகளினின்று வேறுபட வழக்கில் தோன்றும் மாற்றங்களை ஆராய்ந்து பொருத்தமானவற்றை ஏற்று நடத்துமாறு அறிவுரையும் கூறுகிறார். மாற்றருஞ் சிறப்பின் மரபுகளைப் பேணவேண்டும்; அடிப்டை மாறாத மாற்றங்களை ஆராய்ந்து பொருந்துபவற்றை ஏற்கவும் வேண்டும் என்ற தெளிந்த தொலைநோக்குடையது தொல்காப்பியரின் மொழிக்கொள்கை. ஆனால்,

“பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே” (நன்னூல் 462)

என்னும் நன்னூலின் புறனடை நூற்பாவை மட்டுமே பிடித்துக்கொண்டு,

“…தெற்றன உணர்தல் தெள்ளியோர் கடனே” (நன்னூல் 461)

என்ற அதற்கு முந்திய நூற்பா அடியைக் கண்டுகொள்ளாமல், இன்று, விரும்புவாரெல்லாம் விரும்புகிறவாறு தமிழ் மொழியில் புதுமை புகுத்துகின்றனர்; தமிழைப் போதிய அளவு பயிலாதாரும் அதன் மரபுகளை மதியாதாரும் எழுதுபவற்றை எல்லாம் இலக்கியமாகக் கொண்டு, மொழியின் செம்மையை மேம்படுத்துவதற்கு மாறாகப் பாழ்படுத்தும் புதிய இலக்கணம் வகுத்து, வாய்க்கும் வழியெல்லாம் வழக்குப்படுத்தவும் முனைகின்றனர். தமிழாய்ந்த நல்லறிஞர்களது குரல் வலியதாய் இல்லை; தமிழ்மீது அன்புகொண்ட மக்களும் அறியாமல் இதனை  ஏற்றுக்கொள்ளுகின்றனர். ஆங்கிலேயர், புகழ்பெற்ற ஆங்கிலப் பெரும்புலவரான சேக்குப்பியர் எழுதிய இலக்கியத் தொடர்களிலேகூட, இலக்கண ஒழுங்குக்கு ஒத்து வாராதவற்றை ஒதுக்கி இலக்கணத்தைச் செம்மைப்படுத்தினர்.   ஆனால், தமிழே உயிரென முழங்கும் தமிழர், யாரும் எதுவும் செய்யும் நிலையில் தமிழை ஆதரவற்ற குழந்தைபோல் விட்டுவிட்டனரோ என்று தோன்றுகிறது.

தொல்காப்பியம் கூறும் மாற்றரும் சிறப்பின் மரபுகளில் சிலவற்றை அடையாளம் காட்டினால் ஏதாவது நல்லது நடக்காதா என்ற ஏக்கத்துடன் தொடங்குகிறது இந்தக் கட்டுரைத்தொடர். மூதறிஞர்களின் கருத்துகளுக்கும் திருத்தங்களுக்கும் கதவு திறந்தே இருக்கிறது.

தொடக்கமாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை பற்றித் தொல்காப்பிய நூன்மரபு கூறுவதைக் காண்போம்.

தொல்காப்பிய எழுத்ததிகாரத்தினது முதல் நூற்பா இது:

“எழுத்தெனப் படுப

அகரமுதல் னகர இறுவாய்

முப்பஃ தென்ப

சாரந்துவரல் மரபின் மூன்றலங் கடையே” (தொல். எழுத்து 1)

(எழுத்து எனப்படுவன அ முதல் ன் முடிய முப்பது என்பர், சார்ந்துவரும் மரபினை உடைய மூன்று எழுத்துகளைச் சேர்க்காத நிலையில்)

அடுத்த நூற்பா, மேற்கூறிய சார்ந்துவரும் மரபினை உடைய மூன்றும் யாவை என்பதைக் கூறுகிறது:

“அவைதாம்

குற்றிய லிகரம் குற்றிய லுகரம்

ஆய்தம் என்ற

முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன” (தொல். எழுத்து 2)

(அவையாவன, எழுத்துடன் ஒன்றுபோலக் கொள்ளத்தக்க, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றுவகையான புள்ளிகளுமாகும்)

எழுத்தெனப் படுப – எழுத்துக்குரிய முழுத்தகுதி பெற்றவை:

அ முதல் ஔ வரை உயிரெழுத்துகள்             12

க் முதல் ன் வரை மெய்யெழுத்துகள்   18

ஆக மொத்தம் 30

எழுத்தோரன்ன – எழுத்துடன் ஒன்றுபோலக் கருதத்தக்கவை:

குற்றியலிகரம் 1

குற்றியலுகரம்            1

ஆய்தம்            1

ஆக மொத்தம் 3

எனவே, தமிழில் எழுத்துக்குரிய முழுத்தகுதி பெற்றவை 30. அடுத்த நிலையில், எழுத்துப் போன்றவை எனும் தகுதி பெற்றவை 3. இரண்டும் சேர்ந்தாலும் மொத்தம் 33தான். ஆனால், தமிழ் எழுத்துகள் எத்தனை என்று இன்று வினவினால், மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும், 247 என்கின்றனர். விளக்கம் வேண்டினால்,

உயிரெழுத்துகள்         12

மெய்யெழுத்துகள்       18

உயிர்மெய் (12ஜ்18)   216

ஆய்தம்            1

ஆக மொத்தம்             247

என்று கணக்குக் காட்டுகின்றனர்.

இந்தப் பட்டியலில், உயிரும் மெய்யும் தொல்காப்பியம் கூறியபடி முப்பதுதான். ஆனால், சார்ந்துவரும் என்ற மூன்றனுள் ஆய்தம் மட்டுமே இங்கே சேர்க்கப்பட்டுள்ளது; குற்றியலிகரமும் குற்றியலுகரமும் விடுபட்டுள்ளன. மெய்யும் உயிரும் சேர்ந்தொலிக்கும் 216 ஒலிப்புகள், இதில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. குற்றியலிகரமும் குற்றியலுகரமும் தமிழில் இன்று இல்லாது போய்விடவில்லை; உயிர்மெய்களும் தமிழுக்குப் புதியனவல்ல. அவ்வாறாயின், இன்று எழுத்துகளின் எண்ணிக்கை இவ்வாறு வேறுபட்டது எப்படி?

பிற்காலத்து இலக்கண நூலான நன்னூல், எழுத்தெண்ணிக்கை பற்றி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

“உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே” (நன்னூல் 59)

(உயிரெழுத்துகளும் உடம்பு என்னும் மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகளாகும்)

தொல்காப்பியம் ‘எழுத்தெனப்படுப’ என்று கூறியவற்றை நன்னூலார் ‘முதலே’ என்று குறிக்கிறார். இதன்வழி முன்னர் எழுத்து என்றது இன்று முதலெழுத்து ஆயிற்று. எனினும், அவற்றின் எண்ணிக்கை மாறவில்லை.  ஆனால், தொல்காப்பியம் கூறும் சார்ந்துவருவனவற்றில் நன்னூலார் பின்வருமாறு பெரிய மாற்றம் செய்துள்ளார்.

“உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு

அஃகிய இஉ ஐஔ மஃகான்

தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்” (நன்னூல் 60)

(உயிர்மெய், ஆய்தம்; உயிரளபெடை; ஒற்றளபெடை; குறுகியொலிப்பனவாகிய இகரம், உகரம், ஐகாரம் ஔகாரம், மகரம், ஆய்தம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகள் ஆகும்)

சார்ந்துவரும் மரபின என்று தொல்காப்பியர் கூறியவற்றுக்குச் சார்பெழுத்து என்று பெயர்கொடுத்த நன்னூலார், மூன்றைப் பத்தாகக் கூட்டிவிட்டார்; அத்துடன் விடவில்லை, சார்பெழுத்து என்று தாம் கூறும் ஒவ்வொன்றையும் பலவாக விரித்து எண்ணிக்கையை மேலும் பெருக்கிவிட்டார். இதனை விளக்குகிறது பின்வரும் நன்னூல் நூற்பா:

உயிர்மெய் இரட்டுநூற் றெட்டுயர் ஆய்தம்

எட்டுயிர் அளபெழு மூன்றொற் றளபெடை

ஆறேழ் அஃகும் இம்முப் பானேழ்

உகரம் ஆறாறு ஐகான் மூன்றே

ஔகான் ஒன்றே மஃகான் மூன்றே

ஆய்தம் இரண்டொடு சார்பெழுத் துறுவிரி

ஒன்றொழி முந்நூற்று எழுபான் என்ப” (நன்னூல் 61)

(உயிர்மெய் 216; குறுகாத ஆய்தம் 8; உயிரளபெடை 21; ஒற்றளபெடை 42; குற்றியலிகரம் 37; குற்றியலுகரம் 36; ஐகாரக்குறுக்கம் 3; ஔகாரக் குறுக்கம் 1; மகரக்குறுக்கம் 3; ஆய்தக்குறுக்கம் 2; ஆகியவற்றுடன் சார்பெழுத்துகளின் விரிவான எண்ணிக்கை 369)

நன்னூலாரின் இந்தக் கணக்குப்படி, சார்பெழுத்துகளே 369 என்றால், முதலெழுத்து 30ஐயும் சேர்த்துத் தமிழ் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை 399 ஆகிறது! இவர், மேற்கண்ட தமது நூற்பாவின்வழி, 33ஆக இருந்த தமிழ் எழுத்தெண்ணிக்கையை 399ஆக உயர்த்திவிட்டார்.

முன்னர்க் கூறியவாறு, பிந்திய, இன்றைய இலக்கண நூல்களில் காணப்படும் 247 என்ற எழுத்தெண்ணிக்கை, தொல்காப்பியர் கணக்கிலும் சேராமல் நன்னூலார் கணக்கிலும் சேராமல் இரண்டுங்கெட்டதாக உள்ளது.

எழுத்தெண்ணிக்கையை 247 எனக் கொண்டவர்கள், நன்னூலார் கூறிய பத்துச் சார்பெழுத்துகளில் உயிர்மெய், ஆய்தம் இரண்டனை மட்டும் கணக்கில் சேர்த்துக்கொண்டது ஏன்? நன்னூலார் கூறிய பத்துச் சார்பெழுத்துகளில், தமக்கென வரிவடிவம் உடையவை உயிர்மெய்களும் ஆய்தமுந்தான். மற்றவை தனி வரிவடிவம் இல்லாதவை. இதனால், இவர்கள் வரிவடிவம் உடையவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டது  தெரிகிறது. இவர்கள் தொல்காப்பியர் கூறிய சார்ந்துவருவன முன்றனுள் இரண்டனைச் சேர்த்து கொள்ளாமைக்கும், அவர் கூறாத 216 உயிர்மெய் ஒலிப்புகளைச் சேர்த்துக் கொண்டதற்கும் இதுவே காரணம் என்பது தெளிவு. எழுத்து என்பது ஒலிவடிமே; வரிவடிவம் அதன் குறியீடுதான் என்ற உண்மையைக் கருதாத கணிப்பு இது. எனவே, இந்த எண்ணிக்கை எந்த வகையிலும் பொருத்தமானதும் அன்று; சரியானதும் அன்று.

இனி, 33ஐ 399 ஆக்கிய நன்னூலாரின் கணக்கைப் பார்க்கலாம்: உயிர் 12உம் மெய் 18உம் சேர்ந்து எழுத்துகள் 30 என்பதில் நன்னூலார் தொல்காப்பியரின் கருத்துக்கு முரண்படவில்லை. தொல்காப்பியர் சார்ந்து வருவன என்று கூறிய முன்றனைப் பத்தாக்கி, அந்தப் பத்தை மேலும் விரித்து 369 ஆக்கியதால் வந்த குழப்பம் இது.    எனவே, இந்தப் பத்து என்ற எண்ணிக்கை பற்றி முடிவுகண்டால் முழுக் குழப்பத்துக்கும் முடிவு கிடைத்துவிடும்.

தொல்காப்பியர் சார்ந்துவரும் என்று கூறிய குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றுடன், நன்னூலார் உயிர்மெய், உயிரளபெடை, ஒற்றளபெடை, ஐகாரக்குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்ற ஏழு வகைகளைச் சார்பெழுத்தாகச் சேர்த்திருக்கிறார். இவை தொல்காப்பியர் காலத்தில் இல்லாதன அல்ல; அவர் அறியாதனவும் அல்ல. இவற்றைத் தொல்காப்பியர் சார்ந்து வருவனவாகக் கொள்ளவில்லை; நன்னூலார் சார்ந்துவருவனவாகக் கொண்டுள்ளார். அவ்வாறாயின், எது சார்பெழுத்து என்பதிலேயே நன்னூலார் கருத்து வேறுபடுகிறார். இருவரின் சார்பெழுத்துக் கோட்பாடுகளும் வெவ்வேறாக உள்ளன. முதலில், சார்ந்துவருவன என்று தொல்காப்பியர் கூறும் மூன்றனையும், பின்னர், நன்னூலார் சேர்த்துள்ள 7 வகைகளையும் ஆராய்வோம்.

குற்றியலுகரம்

“நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி யீற்றும்

குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே (தொல். எழுத்து 36)

(நெடிலுக்குப் பின்னரும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்த சொல்லின் இறுதியிலும் வல்லின மெய்கள் ஆறிலும் ஊர்ந்து வருவது குற்றியலுகரம்)

தனிக்குறிலுக்குப் பிறகு மெய்வருவன தவிர மற்றெல்லாச் சொற்களின் இறுதியிலும் வரும் வல்லின மெய்களில் ஊர்ந்து வருவது குற்றியலுகரம் என்று இந் நூற்பாக் கூறுகிறது.

இந் நூற்பாவுக்கான விளக்கத்தில் இரு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு மாத்திரையுடைய உகரக் குறில் அரை மாத்திரையாகக் குறுகியதால் வருவதே குற்றியலுகரம் என்று ஒரு சாராரும், இது சரியான கருத்தன்று; குற்றியலுகரம் தனியே தோன்றும் ஒலியே என்று மறு சாராரும் கருதுகின்றனர். இதனை நாமும் ஆராயலாம்:

குற்றியலுகரம் வல்லின மெய்களில் மட்டும் ஊர்ந்து வருவதேன்? தனிக்குறிலுக்குப் பின்வரும் வல்லின மெய்யில்  வாராததேன்? இந்த வினாக்களுக்கும் விடைகண்டால் குற்றியலுகரம் தோன்றும் விதம் தெளிவாகிவிடும்.

ஆங்கிலத்தில் வழங்கும் tணீறீளீ, தீமீணீநீலீ, னீமீணீt என்ற வல்லின மெய்யீற்றுச் சொற்கள் போலத் தமிழில் தொடக்கக்  காலத்தில், பாக், காச், மாட் போன்ற வல்லின மெய்யீற்றுச் சொற்கள் இருந்து, வழக்கில் குறிய உயிரொலி சேர்த்து ஒலிக்கப்பட்டிருக்கவேண்டும் பின்னர் அவற்றிலுள்ள குற்றியலுகரம் அடையாளங் காணப்பட்டு பாகு, காசு, மாடு என்று எழுதுமுறை தோன்றியிருக்க வேண்டும். இன்றைய மொழியியலார் உறுதிப்படுத்தியுள்ளவாறு, வல்லின மெய்கள் ஒலிப்பில்லாத ஒலிகள். சொல்லுக்கு இடையில் வரும் வல்லின மெய்களை முன்னும் பின்னும் உள்ள ஒலிகளின் உதவியால் செவிக்குப் புலப்படுத்திவிடலாம். ஆனால், அவை சொல்லுக்கு இறுதியில் வந்தால்,   அடுத்து ஒலியேதும் இல்லாமையால் அவற்றைப் புலப்படுத்த முடிவதில்லை. இதனால், ஒலிப்பவர்கள் அவற்றைப் புலப்படுத்துவதற்காகக் குறிய உயிரொலியைச் சேர்த்து ஒலிக்கின்றனர். ஆங்கிலேயரில்கூடப் பலர் வல்லின மெய்யீற்றுச் சொற்களை, ஈற்று வல்லின மெய்களை அழுத்திக் குறிய உயிரொலியுடன் ஒலிப்பதைக் கேட்கலாம். இவ்வாறு, வல்லின மெய்யீறுகளைச் செவிக்குப் புலப்படுத்துவதற்காக ஒலியுறுப்புகள் செய்யும் இயல்பான முயற்சியால் தோன்றும் குறிய உயிரொலியே அரை மாத்திரையுடைய குற்றியலுகரமாகும். இதனாலேயே, வருமொழி முதலில், ஒரு மாத்திரை அல்லது இரு மாத்தி¬யுடைய உயிர் வரும்போது, நிலைமொழி ஈற்றிலிருந்த குற்றியலுகர உயிரொலி தேவைப்படாமல் மறைந்துவிடுகிறது. வல்லின மெய்யீறுகளில் மட்டுமே குற்றியலுகரம் ஊர்ந்துவருவதற்கான காரணம் இதுவே. தமிழில் வல்லின மெய்கள் சொல்லீறாகாமைக்கும் காரணம் இதுவே.

அவ்வாறாயின், தனிக்குறிலுக்குப் பிறகு வரும் வல்லின மெய்களில் குற்றியலுகரம் தோன்றாததேன்?

தனிக்குறிலும் சொல்லின் முதற்குறிலும் மற்ற தொடக்க எழுத்துகளினின்று வேறாகவே நடக்கின்றன. அ + பக்கம் = அப்பக்கம், அ + வீடு = அவ்வீடு, அ + முறை = அம்முறை என்றவாறு தனிக்குறில்கள் எல்லாம் வருமொழி முதன்மெய் மிகுகின்றன; உயிர் வரும்போதும், அ + உலகம் = அவ்வுலகம், இ + ஆட்சி = இவ்வாட்சி என்று இடையில் தோன்றும் மெய் இரட்டியே புணர்கிறது. முதற்குறிலை அடுத்த மெய்யும், கல் + அடி = கல்லடி, கண் + இமை = கண்ணிமை என இரட்டியே புணர்கிறது. ஆனால், நிலைமொழி தனிக்குறிலோ மெய் அடுத்த முதற்குறிலோ அன்றெனின், அவை காலடி, கடலடி, காணொளி, கவணடி என இரட்டாமல் இயல்பாகவே புணர்கின்றன. முதலில் குறிலை ஒலித்தபின்னர் எஞ்சுகிற மிகுதியான மூச்சாற்றல், தங்கித் தொடர்ந்தொலிக்க உதவியாக அரை மாத்திரையளவிலான ஒலித்தடம் தேவைப்படுவதே இதற்குக் காரணமாகும். இந்த மூச்சாற்றலின் வலிமையால் தனிக்குறிலுக்குப்பின் வரும் வல்லின மெய்யீறு அரை மாத்திரையுடைய குற்றியலுகரமாக ஒலித்துநிற்பது கடினம், ஆதலின், அஃது, ஒரு மாத்திரையுடைய உயிராக நீண்டு ஒலிக்கிறது. இக் காரணத்தால் இச் சொற்கள் தோன்றும்போதே பகு, மது, உடு என முற்றுகர ஈறுகளுடனேயே தோன்றியிருத்தல் வேண்டும்.

எனவே, குற்றியலுகரம் உகரக்குறில் குறுகியதால் வந்ததன்று; மாறாக, சொல்லின் ஈற்றிலுள்ள வல்லினமெய்யைப் புலப்படுத்துவதற்காகப் பிறப்பிலேயே அரை மாத்திரையுடன் தனியே தோன்றிய குற்றுயிரொலியேயாகும்.

“இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே…” (தொல். எழுத்து 37)

“…ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்” (தொல். எழுத்து 406)

என்ற, குற்றியலுகரம் பற்றிய நூற்பாக்களில் வரும் ‘குறுகும்’, ‘குறுகிடன்’ என்ற சொற்கள், முற்றுகரம் குறுகிக் குற்றியலுகரம் ஆவதையே குறிப்பதாய்ச் சிலர் கருதுகின்றனர். இவற்றில் உகரம் என்பது முற்றுகரம் என்றும், குறுகும், குறுகிடன் என்ற சொற்கள், முற்றுகரம் குறுகுவதையே குறிக்கின்றன என்றும் கொள்ளத் தேவையில்லை.

“யகரம் வருவழி இகரம் குறுகும்

உகரக் கிளவி துவரத் தோன்றாது” (தொல். எழுத்து 410)

குற்றியலிகரம் பற்றிய இந் நூற்பாவில் ‘இகரம் குறுகும்’ என்பதை முற்றிகரம் குறுகி அரை மாத்திரையாகும் என்று கொள்ளமுடியுமா? குற்றியலிகரம் தோன்றுமிடத்தில் யகரத்துற்கு முந்தி வந்தது குற்றயலுகரந்தானே. அரை மாத்திரைக் குற்றியலுகரம் ஒலிச்சாயல் மாறியதால் ஒருமாத்திரை இகரமாகாது. அரை மாத்திரை இகரம் மேலும் குறுகுமென்று தொல்காப்பியர் கூறியிருக்கவும் முடியாது. இங்கு இகரம் குறுகும் என்றது, குற்றியலுகரமாய் இருந்து இகரச்சாயல் பெற்ற ஒலி, தொடர்ந்து அதே அளவில் குறியதாகவே ஒலிக்கும் என்ற பொருளில்தான். ‘உகரக்கிளவி’ என்பதும் முற்றுகரமன்று. ஏனெனில், அங்குள்ளது குற்றியலுகரமே. குற்றியலுகர இயலில் வந்ததால், ‘உகரம்’ குற்றியலுகரத்தையே குறிக்கும். அதுவே குற்றியலிகரமாவதால், ‘இகரம்’ குற்றியலிகரத்தையே குறிக்கும்.

இதேபோல், குற்றியலுகரத்தைப் பற்றிய (37, 406) நூற்பாக்களில் குறுகும் என்றதற்கு, குறுகியதாகவே ஒலிக்கும் என்றும், குறுகிடன் என்றதற்கு, குறுகி ஒலிக்கும் இடம் என்றும் பொருள்கொள்ளலாம். எனவே, இச் சொற்களை வைத்து, முற்றுகரம் குறுகித்தான் குற்றியலுகரம் வந்தது என்பதே தொல்காப்பியர் கருத்து எனல் பொருந்தாது.

இதன்படி, தொல்காப்பியர் சார்ந்துவருமென்ற குற்றியலுகரம், தனியே தோன்றியதும் பிறப்பிலே அரை மாத்திரை யுடையதுமான குற்றுயிரொலியே. குற்றியலுகரத்தின் ‘சார்ந்துவரல் மரபு’ என்பது, அது நெடிலுக்கும் பின்னும் தொடர்மொழி இறுதியிலும் வரும் வல்லினமெய்களைச் சார்ந்து தோன்றுவதேயாகும். நுந்தை என்ற மொழிமுதற் குற்றியலுகரமும், முன்பின் நகர மெய்களைச் சார்ந்தே தோன்றுவதே.

குற்றியலிகரம்

யகரம் வருவழி இகரம் குறுகும்

உகரக் கிளவி துவரத் தோன்றாது (தொல். எழுத்து. 410)

(யகரம் அடுத்து வருமாயின், அதற்கு முந்திய குற்றியலுகரம் தன் ஒலிப்பு முற்றாகத் தோன்றாமல் இகரச் சாயலில் மாறித் தன் குறுகிய இயல்புடனேயே ஒலிக்கும்)

அடுத்து உயிர்வந்தால் மறைந்துவிடும் குற்றியலுகரம், அரையுயிரொலியான யகர ஒலி வரும்போது, மறையாமல்  யகர ஒலியின் பாதிப்பால் உகரச்சாயல் மாறி இகரச் சாயல் பெறுகிறது. இந்த இகரச் சாயலால் அது குற்றியலிகரம் என்று பெயர்குறிக்கப்பட்டாலும், அஃது ஒலிப்புச்சாயல் மாறிய குற்றியலுகரமேயாகும். எனவே, இதுவும், தனியே தோன்றியதும் பிறப்பிலேயே அரை மாத்திரையுடையதுமான குற்றுயிரொலியேயாகும். இதன் ‘சார்ந்துவரல் மரபு’ என்பது, குற்றியலுகரத்தையும் அடுத்துவரும் யகர மெய்யையும் சார்ந்து தோன்றுவதேயாகும். மியா என்ற தனிமொழிக் குற்றியலிகரமும் மகரமெய்யையும் அடுத்துவரும் யகரத்தையும் சார்ந்து தோன்றுவதே.

ஆய்தம்

“குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே (தொல். எழுத்து 38)

(குறிலை அடுத்தும், ஆறு வல்லின உயிர்மெய்களுக்கு முந்தியும் ஆய்தம் தோன்றும்)

ஆய்தம், தனிக்குறிலுக்குப் பின்னரே தோன்றும் என்பது நுட்பமாகக் கவனிக்கத்தக்கது. சொல்லின் முதற்குறிலுக்கு அடுத்த இடம், மற்ற தொடக்க எழுத்துகளைக்கொண்ட இடங்களினின்று வேறுபடுவது, மேலே விளக்கப்பட்டது.   குறிலுக்குப்பின் மெல்லின இடையின மெய்கள், உயிர்வரின் இரட்டுகின்றன; வல்லினமெய்யீறுகள் குற்றியலுகரம் ஆகாமல் முற்றியலுகரமாகவே ஒலிக்கின்றன; இவ் வரிசையில், இங்கே சொல்லின் முதற்குறிலுக்குப்பின் ஆய்தம் தோன்றக் காண்கிறோம். மேலே விளக்கியவாறு, முதலில் குறிலை ஒலித்தபின் எஞ்சும் மிகுதியான மூச்சாற்றலே இந்த வேறுபாட்டுக்கு காரணமாகிறது. இதனைப் புரிந்துகொள்ள உதவியாகச் சில காட்டுகளைக் காண்போம்.

மெய்களை ஒலிப்பு எளிமைக்காக அகரம் சேர்த்து ஒலிப்பது மரபு (மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் – தொல். எழுத்து 46). இவ்வாறு அகரம் பெற்ற மகர மெய்யை, இலக்கண நூற்பாக்கள் மஃகான் என்று குறிப்பதைக் காண்கிறோம். கான் என்பது எழுத்துச்சாரியை. ம + கான் = மகான் என்று புணர்வதில்லை. இவ்வாறு புணர்ந்தால் பொருளும் வேறுபடக்கூடும். ம என்ற குறிலைத் தனித்துக்காட்ட அங்கே விட்டிசை அல்லது அரை மாத்திரை நிறுத்தம் தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நிறைவுசெய்ய உதவியாக ஆய்தம் தோன்றி அது மஃகான் என்று புணர்கிறது. அது, இது போன்ற சொற்கள், உயிருக்கு முன்னர், அஃது, இஃது என்றாகின்றன. அது + அன்று என்ற தொடரை அதுவன்று என உடம்படுமெய்யுடன் புணரலாம்; உகரம் கெட அத் + அன்று என்றும் புணரலாம். இவ்வாறு புணரும்போது, அகரக்குறிலுக்கு அடுத்த த் என்ற மெய், வரும் உயிருடன் சேர்ந்து அதன்று என உயிர்மெய்யாவதால், அகரக் குறிலுக்குப்பின், மேலே விளக்கியவாறு, தேவைப்படும் நிறுத்தத்தடம் இல்லாது போகிறது. இதனை நிறைவுசெய்யவே, அங்கு ஆய்தம் தோன்றி அஃதன்று என்று அது புணர்கிறது. ஆய்தம் குறிலுக்குப் பின்னரே எப்போதும் வருவதற்குக் காரணம் இதுதான்.

இவ்வாறு, எழுத்தொலிகளுக்கு இடையே நிறுத்தம் தேவைப்படும்போது தோன்றும் குறிய உயிரொலியை, ஆங்கிலத்தில் ரீறீஷீttணீறீ stஷீஜீ என்கிறார்கள். இதுபோன்ற ஓர் ஒலியே ஆய்தமாகும். இதுவும் பிறப்பிலேயே அரை மாத்திரையுடன் தோன்றும் ஒலிதான். இது, முன்பே இருக்கும் எழுத்துகளில் எதுவும் குறுகியதால் வந்ததன்று.

மேற்கண்ட நூற்பாவின், “குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி..” என்ற அடி, தனிக்குறில் என்று குறிப்பிடாததாலும்,  ‘விலஃஃகி’, ‘இலஃஃகு’ போன்ற இலக்கிய வழக்குகளில் இருகுறில்களுக்குப் பின்னர் ஆய்தம் வருவதாலும், முதலில் வரும் குறிலுக்குப் பின்னரே ஆய்தம் தோன்றும் என்பது எங்ஙனம் பொருந்தும் என்ற வினா எழலாம்.

குறிலுக்குப்பின் மெய் இரட்டல் பற்றிக்கூறும் “…குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்…” (தொல். எழுத்து 160) என்ற நூற்பா, தனிக்குறில் என்று விதந்து கூறாவிடினும், தனிக்குறிலையே குறித்தது. இதுபோல், மேற்கண்ட ஆய்தம் பற்றிய நூற்பாவிலும் “குறியதன் முன்னர்” என்ற அதே தொடர் தனிக்குறிலையே குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. இத் தொடர், சொல்லில் வரும் குறிலைப் பொதுவாகவே குறிக்கிறது என்ற கருத்தையொட்டி அமைந்த இலக்கணத்தைப் பின்பற்றிய பிற்கால வழக்குகளாக, ‘விலஃஃகி, இலஃஃகு’ போன்றவை இருக்கலாம். பிந்திய வழக்கைச் சார்ந்து முந்திய நூற்பாவுக்கு பொருள்கொள்ள முடியாது. அப்படியே கொண்டாலும் மேற்கண்ட செய்யுள் வழக்குகளிலும், ஆய்தம், குறிலுக்குப்பின் ஓசை நிறைக்கவே வந்திருப்பதால் குறிலுக்குப்பின் தேவைப்படும் விட்டிசை இடத்தை நிறைவுசெய்யவே ஆய்தம் தோன்றுகிறது என்ற கருத்துக்கு அது முரணாகாது.

வல்லின மெய்க்கு முந்தியே ஆய்தம் வருவது ஏன்?

ஆங்கிலத்தில் ரீறீஷீttணீறீ stஷீஜீ என்னும் ஒலியை ஒத்ததே தமிழ் ஆய்தம் என்பது மேலே கூறப்பட்டது. இதனைத் தமிழில் குரல்வளைத் தடையொலி எனலாம். மொழியியலார், வல்லின மெய்களை stஷீஜீs (தடையொலிகள்) என்றே குறிக்கின்றனர். ஆய்தமும் வல்லினமெய்களும் குரல்வளை ஒலிசார்ந்த தடையொலிகள் ஆதலின், அவை அடுத்தொலிப்பது இயல்பும் எளிதும் ஆகும். எனவே, ஆய்தத்துடன் வல்லின மெய்களே மயங்குதற்கு உரியன. மெய்ம்மயக்கம் பற்றிய பகுதியில் கூறப்படாவிட்டாலும், ‘…உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே’ என்ற நூற்பா இச் செய்தியையும் உள்ளடக்கியதே. வழக்கை ஆராய்ந்தால் Õஅஃகம், கஃசு, முஃடீது, அஃது, அஃபெரிய, அஃறிணை என்றவாறு, ஆய்தம் வல்லினமெய்களுடன் மட்டுமே மயங்குவதை அறியலாம்.

ஆதலின், குற்றியலுகரத்தையும் குற்றியலிகரத்தையும் போன்றே, ஆய்தமும் தனியாகத் தோன்றும் ஒலியாகவும் பிறக்கும்போதே அரைமாத்திரை அளவினதாகவும் இருக்கிறது. இதன் ‘சார்ந்துவரல் மரபு’ என்பது, முதலில் வரும் குறிலையும் அடுத்துவரும் வல்லின மெய்யையும் சார்ந்து தோன்றுவதேயாகும்.

எனவே, தொல்காப்பியர் கூறும் சார்ந்துவரும் ஒலிகள் மூன்றுமே, தனியே பிறப்பனவும் அரைமாத்திரை ஒலியாகத் தோன்றுவனவுமே என்பது தெளிவு.

————————- (இருபகுதியாக வெளியிடுவதாயின் முதற்பகுதியை இத்துடன் நிறுத்தலாம்) ——————

தொல்காப்பியர், சார்ந்துவரல் மரபை உடையன என்றும் எழுத்தோரன்ன என்றும் கூறிய மூன்றனையும் பற்றித் தேவையான அளவு ஆராய்ந்துவிட்டோம். இனி, நன்னூலார் சார்பெழுத்து என்னும் பெயரில் பிறகு சேர்த்த ஏழு வகைகளையும் ஆராய்வோம்.

உயிர்மெய்

“புள்ளி ஈற்றுமுன் உயிர்தனித் தியலாது

மெய்யொடு சிவணும் அவ்வியல் கெடுத்தே” (தொல். புணரியல் 138)

(சொல்லின் ஈறான மெய்யை அடுத்துவரும் உயிர், தனித்து நில்லாது; மெய்யின் தனி இயல்பை மாற்றி அம் மெய்யுடன் சேர்ந்து உயிர்மெய்யாக ஒலிக்கும்)

மெய்யுயிர் நீங்கின் தன்னுரு வாகும் (தொல். புணரியல் 131)

(உயிர்மெய்யாகச் சேர்ந்தொலித்த நிலைமாறி மெய்யை விட்டு உயிர் நீங்கினால், மெய் மீண்டும் தன் தனி இயல்பை அடையும்)

மேற்கூறிய தொல்காப்பிய நூற்பாக்கள், உயிரும் மெய்யும் அடுத்தடுத்து வரும்போது சேர்ந்தொலிக்கும் நிலையே உயிர்மெய் என்பதையும், அவை பிரிந்து உயிர் நீங்கிவிட்டால், மெய், மீண்டும் தனக்குரிய அரை மாத்திரை அளவினதாகத் தனித்து ஒலிக்கும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.

உயிர்மெய் என்ற பெயர்ச்சுட்டே, இஃது, உயிரும் மெய்யுமாகிய இரண்டு எழுத்துகள் சேர்ந்தொலிக்கும் நிலையே என்பதை உணர்த்த வல்லதாகும். ஆங்கில எழுத்துகளில், ணீ மீ வீ ஷீ u என்ற ஐந்தும் உயிர்கள்; மற்றவை மெய்கள். தமிழில் குமரி என எழுதும் பெயரை ஆங்கிலத்தில் ரிuனீணீக்ஷீவீ என்று எழுதுகிறோம். ஆங்கிலத்தில் மெய்யும் உயிரும் அடுத்தடுத்து எழுதப்படுகின்றன. அதேமுறையில் தமிழில் அப் பெயரைக் க்உம்அர்இ என்று எழுதாமல்  மெய்யும் உயிரும் சேர்ந்தொலிப்பதைக் குறிக்கும் குறியீடுகளை ஆளுகிறோம். இரு முறைகளிலுமே அப் பெயரில் உள்ளவை அதே மெய்களும் அதே உயிர்களுந்தான். ஆங்கிலத்தில், அப் பெயரில்  ளீ னீ க்ஷீ என முன்று மெய்களும் u ணீ வீ என மூன்று உயிர்களும் ஆக 6 எழுத்துகள் என்று கணக்கிடுகிறோம். அதுபோலவே, தமிழில் க் ம் ர் ஆகிய மூன்று மெய்களும் உ அ இ ஆகிய மூன்று உயிர்களும் ஆக 6 எழுத்துகள் என்றுதானே கணக்கிடுதல் வேண்டும். மாறாக, இந்த 6 எழுத்துகளுக்கும் அப்பால், கு ம ரி என்ற 3 உயிர்மெய் எழுத்துகளும் இருப்பதாகக் கொள்வது என்ன கணக்கு? ளீ ஓர் எழுத்து, u  ஓர் எழுத்து அப்புறம் ளீu ஓர் எழுத்து என்றால் ஆங்கிலேயர் ஏற்பாரா? ஆனால், தமிழில் மட்டும், க் ஓர் எழுத்து, உ ஓர் எழுத்து என்று கணக்கிட்டபின், கு என்பதும் ஓர் எழுத்து என்று சேர்ப்பது எங்ஙனம் பொருந்தும்? இந்தப் பொருந்தாத கணக்கைத்தான் நன்னூல் செய்திருக்கிறது. 12 உயிர்களும் 18 மெய்களும் ஆக 30 எழுத்துகள் என்று கணக்கிட்ட பிறகு, அவை சேர்ந்து ஒலிக்கும் இடங்களைத் தனியே 216 உயிர்மெய்கள் என்றும் கணக்கிட்டுள்ளது. அம்மாவும் அப்பாவும் வந்ததை, அம்மா ஒருவர், அப்பா ஒருவர், பெற்றோர் இருவர் ஆக நால்வர் வந்ததாகக் கூறுவது போன்ற கணக்கு இது.

இதனைச் சார்பெழுத்து என்று கூறுவது, இதனினும் பொருத்தமற்றது. க என்ற உயிர்மெய்யில் க், அ என்ற 2 முதலெழுத்துகள் உள்ளன. இரு முதலெழுத்துகள் சேர்ந்து ஒரு சார்பெழுத்தாவது எப்படி?

தனித்தனியே க் அரை மாத்திரையும் அ ஒரு மாத்திரையும் ஒலிப்பது மாறி, க என்று சேர்ந்தொலிக்கும்போது ஒரு மாத்திரை ஒலிப்பதால் உயிர்மெய்யில் அரை மாத்திரை குறைந்தது; எனவே அது வேறு எழுத்து; இவற்றைச் சார்ந்து தோன்றிய சார்பெழுத்து என்பது நன்னூலார் கருத்துப் போலும். இதுவும் பொருந்தாத கணிப்பே.

உணவைக் கையால் எடுத்து வாயில் வைக்கும் செயலுக்குத் தனியே 10 நொடி என்றும், வாயைத் திறப்பதைத் தனியே கணித்தால் 5 நொடி என்றும் கொண்டால், அவை தனித்தனியே நிகழ்வதற்கு மொத்தம் 15 நொடி ஆகலாம். ஆனால் இரு செயல்களும் ஒரே நேரத்தில் நடக்கும்போது, கை செயற்படும் நேரத்திலேயே வாயும் திறந்துவிடுவதால், மொத்தம் 10 நொடியிலேயே இரு செயல்களும் நடந்துவிடுமன்றோ! இதுபோல், க் தனியே ஒலிக்க அரை மாத்திரைக் காலமாகலாம்; அ தனியே ஒலிக்க ஒரு மாத்திரை ஆகலாம். இரண்டும் ஒரேநேரத்தில் சேர்ந்தொலிக்கும்போது ஒரு மாத்திரைக் காலத்திலேயே இரண்டும் ஒலித்துவிடுவது இயல்பான உண்மைதானே. எனவே, உயிர்மெய் என்பது இருவேறு ஒலிகள் ஒரேநேரத்தில் (sவீனீustணீஸீமீஷீusறீஹ்) ஒலிக்கும் நிலையேயன்றி, ஒலிக்கும்நேரம் குறைந்ததாலேயே, புதியவொரு தனியெழுத்தாகாது.

எனவே, உயிர்மெய் தனியோர் எழுத்தே அன்று; அதனால் அது சார்பெழுத்தும் அன்று.

உயிரளபெடை

நீட்டம் வேண்டின் அவ்வள புடைய

கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் (தொல். எழுத்து 6)

(உயிர்நெடிலுக்கு அதன் இயல்பான அளவுக்கு மேல் நீட்டம் வேண்டினால், தேவையான அளவுடைய குறில்களைச் சேர்த்தெழுதி, அந்த அளவு நீட்டி ஒலிக்கலாம்)

இருக்கும் உயிர்நெடில் மேலும் நீண்டு ஒலிப்பதே உயிரளபெடை. அதன் மாத்திரை தேவைக்கேற்பக் கூட்டி ஒலிக்கப்படுவது. ஓர் எழுத்து, நீட்டி ஒலிப்பதால் வேறு எழுத்தாகும் எனில், 2 மாத்திரை எழுத்தை 3 மாத்திரையாக நீட்டுவது ஓர் எழுத்தென்றும், அதையே 4 மாத்திரையாக நீட்டுவது வேறு எழுத்தென்றும் கொள்ள நேரிடும். இது, “மூவளபு இசைத்தல் ஓரெழுத்து இன்றே” (தொல். எழுத்து 5) என்ற தெளிவான நூற்பாவுக்கு முரணாகிவிடும். அ நீண்டு ஆ ஆகாது; இரண்டுக்கும் பிறப்பிடம் ஓன்றாயினும் முயற்சி வெவ்வேறு. அவை வரம்புடைய மாத்திரையளவைக் கொண்டவை. ஆனால், அளபெடை, முயற்சியால் நெடிலினின்று வேறுபட்டதன்று. ஆதலின், அ, ஆ வெவ்வேறு எழுத்துகளானதால், அளபெடையும் நெடிலைச் சார்ந்து உருவான வேறு எழுத்து என்பது பொருத்தமற்ற கருத்தேயாகும்.

எனவே, உயிரளபெடை தனியாகத் தோன்றும் ஓர் எழுத்தும் அன்று; அதற்குத் திட்டவட்டமான மாத்திரையளவும் இல்லை. இந் நிலையில் அஃது தனியோர் எழுத்தன்று; அதனால் அது சார்பெழுத்தும் அன்று.

ஒற்றளபெடை

“அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்…” (தொல். எழுத்து 33)

(உயிர் தன் அளவுக்கு மேல் உயிர்த்தொலித்தலும், ஒற்றுத் தன் ஒலிப்பு நீளுதலும்…)

வல்லின மெய்கள் முன்னரே கூறியது போன்று, ஒலிப்பில்லாத ஒலிகள். ஒலிப்பில்லா ஒலிகள் நீண்டு ஒலிக்க வழியில்லை. எனவே அவை அளபெடுப்பதில்லை. ஆனால், மெல்லின மெய்களும், நுண்ணொலிகளாகிய ர், ழ் தவிர்ந்த மற்ற நான்கு இடையின மெய்களும் தொடர்ந்தொலிக்கக் கூடியவை (sஷீஸீஷீக்ஷீஷீus). எனவே, இவற்றை அரை மாத்திரையளவும் தொடர்ந்தும் ஒலிக்கமுடியும். இவ்வாறு தொடர்ந்து ஒலிப்பதே ஒற்றளபெடை. உயிரை நீட்டி ஒலிப்பதால் அது வேறு புதிய எழுத்தாகாமை போலவே, மெய்யைத் தொடர்ந்து ஒலிப்பதால் அது வேறு புதிய எழுத்தாகாது. தேவைக்கேற்பத் தொடர்ந்தொலிப்பதால் அது திட்டவட்டமான மாத்திரையளவை உடையதும் அன்று. ஒற்றளபெடை, அந்த மெய்யினின்று பிறப்பாலோ முயற்சியாலோ வேறுபட்டதும் அன்று.

எனவே, ஒற்றளபெடை தனியோர் எழுத்தன்று; அதனால், அது சார்பெழுத்தும் அன்று.

ஐகாரக் குறுக்கம்

“ஓரள பாகும் இடனுமா ருண்டே”

தேருங் காலை மொழிவயி னான” (தொல். எழுத்து 57)

(ஆராயும்போது, சொல்லில் வரும் நிலையில் ஒரு மாத்திரையளவே ஒலிக்கும் இடமும் உண்டு)

இதற்கு முந்திய நூற்பா ஐகாரம் பற்றியதாதலின் இதுவும் ஐகாரம் பற்றியதேயாயிற்று. சொல்லில் ஐகாரம் ஒரு மாத்திரை ஒலிக்கும் இடமும் உண்டு என்றுதான் இந் நூற்பாக் கூறுகிறது. நன்னூல் இதனை மேலும் விரிக்கிறது.

“தற்சுட்டு அளபொழி ஐம்மூ வழியும்

நையும் ஔவும் முதலற்று ஆகும்” (நன்னூல் 95)

(ஐகாரம் தன்னைக் குறிக்கும்போது ஒலிக்கும் அளபு தவிர, சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும்போது குறுகும். ஔகாரமும் சொல்லின் முதலில் ஐகாரம் போன்றே குறுகும்)

இதற்கு உரையாசிரியர் சிலர், ஐகாரம் சொல்லின் மூவிடத்தும் குறுகும் என்பதுடன் முதலில் அரை மாத்திரை குறுகி ஒன்றரை மாத்திரையாகும் என்றும இடையிலும் கடையிலும் ஒரு மாத்திரையாகும் என்றும் விளக்கம் கூறியுள்ளனர். ஒரு மாத்திரை குறுகும் என்று தொல்காப்பியம் தெளிவாகக் கூறுவதால் முதலில் ஒன்றரை மாத்திரை குறுகுதல் என்பது இல்லை. பையன் என்பதைப் பய்யன் என்று போலியாக ஒலிக்கும்போது, பய் என்ற குறிலும் மெய்யும் ஒன்றரை மாத்திரை ஒலிக்கலாம். இஃது ஐகாரம் குறுகி ஒலித்ததாகாது. சொல்லின் தொடக்கத்தில் மூச்சாற்றலில் தளர்ச்சி இராது என்பதால், ஐகாரம் முதலில் குறுகும் வாய்ப்பில்லை. சொல்லின் இறுதியிலும் வலிந்து நிறுத்தினாலன்றி அல்லது பேச்சு வழக்கிலன்றி, முறையான ஒலிப்பில் இறுதியிலும் ஐகாரம் குறுகத் தேவையில்லை. ‘இடனும்’ என்ற உம்மையால், ஐகாரம் குறுகும் இடம் குறைவே என்பதும் குறுகாமையே மிகுதி என்பதும் தெளிவாகிறது. குற்றியலிகரமும் குற்றியலுகரமும் வருமிடங்களையும், மகரம் குறுகுமிடத்தையும் (ஔகாரமும் ஆய்தமும் குறுகாமை உரிய இடத்தில் விளக்கப்படுகிறது) தெளிவாகச் சுட்டியுள்ள தொல்காப்பியர், ஐகாரம் குறுகுமிடத்தை சுட்டாமல் விட்டார் என்பது அத்துணைப் பொருத்தமாயில்லை. மேற்கண்ட நூற்பாவில், ‘மொழிவயின்’ என்ற தொடரில் வரும் ‘வயின்’ என்ற இடஞ்சுட்டும் உருபு, இடையில் அல்லது நடுவில் என்ற பொருளுடையதாய் இருத்தலும், அதுவே, ஐகாரக்குறுக்கம் சொல்லின் இடையில் வருமென்று உணர்த்தலும் கூடும். தொல்காப்பியர் இடஞ்சுட்டும் உருபுகளாக ஆளுகிற, மருங்கு, மிசை, முன்னர், வயின் போன்ற பல சொற்கள் அக் காலத்தில் துல்லியமான பொருள்வேறுபாடு உடையனவாய் வழங்கியிருத்தல் வேண்டும். அவற்றின் பொருள் வேறுபாடுகளை ஆராய்ந்து நிறுவினால், இந்த வயின் என்ற சொல்லின் துல்லியமான பொருள் இடையில் அல்லது நடுவில் என்பது தெளியப்பட்டு அதனால், இந்தச் சிக்கல் முற்றாகத் தீரக்கூடும்.

வளையல் என்பது வளயல் என ஒலிப்பது போலச் சொல்லிடையே ஐ, யகரத்துக்கு முந்திவரும் தருணங்களில்,   நிகழுவதே ஐகாரக்குறுக்கமாகும். ளை, ள என ஒலிப்பதால் அக் குறுக்கமும் ஒரு மாத்திரையேயாகும்.

அளபெடையில், எழுத்து நீண்டு ஒலிப்பது எப்படித் தனிவேறு எழுத்தாகாதெனக் கண்டோமோ, அவ்வாறே, ஐகாரக் குறுக்கமும், சொல்லின் இடையில் ஐகாரம் குறுகி ஒலிக்கும் நிலையே அன்றி தனிவேறு எழுத்தாகாது. கூட்டுயிராகிய ஐகாரத்தின் முதலொலி அகரமேயாதலின், அது சொல்லின் இடையில் குறுகி அகரம் போன்று ஒலிக்கும்போதும் அது பிறப்பிலோ முயற்சியிலோ வேறுபடுவதாகக் கொள்ளவும் இயலாது.

எனவே, ஐகாரக் குறுக்கம் தனிவேறு எழுத்தன்று; அதனால் அது சார்பெழுத்தும் அன்று.

ஔகாரக் குறுக்கம்

நூற்பா 57, ஐகாரம் பற்றியவையான 56ஆம், 58ஆம் நூற்பாக்களுக்கு இடையில் வருகிறது. எனவே, இஃது ஐகாரக்குறுக்கம் பற்றியதே; ஔகாரக்குறுக்கம் பற்றியும் இது கூறுவதாகக் கொள்ள எந்தக் காரணமுமில்லை. ஐகாரம் ஔகாரம் இரண்டுமே கூட்டுயிர் ஒலிகள் என்பதால், ஐகாரம் குறுகும்போது, ஔகாரமுங் குறுகுந்தானே என்ற கருத்தால், வலிந்து உருவாக்கப்பட்டதே ஔகாரக் குறுக்கம். ஐகாரம் முதலில் குறுகாமையால் ஔகாரமும் முதலில் குறுகாது. ஔகாரம் இடையிலும் இறுதியிலும் வாராது என்பதால், ஐகாரத்துக்குச் சொல்லின் இடையில் நேரும் குறுக்கம், ஔகாரத்துக்கு நேர வாய்ப்பில்லை. எனவே, ஔகாரக் குறுக்கம் என்னும் ஒன்று இல்லை.

ஔகாரக் குறுக்கமே இல்லையென்பதால், அப்படியொரு சார்பெழுத்தும் இல்லை என்பது தெளிவு.

மகரக் குறுக்கம்

“அரையளபு குறுகல் மகரம் உடைத்தே

இசையிடன் அருகுந் தெரியுங் காலை” (தொல். எழுத்து 13)

(பாதியளவு குறுகும் இயல்புடையது மகர மெய்; ஆராயும்போது அது குறுகியொலிகுக்கும் இடம் குறைவே)

“னகாரை முன்னர் மகாரம் குறுகும்” (தொல். எழுத்து 52)

(னகர மெய்க்குப் பின்னர் வரும்போது மகரமெய் குறுகும்)

“வகார மிசையும் மகாரம் குறுகும்” (தொல். எழுத்து 330)

வகர மெய்க்கு முந்தி வரும்போதும் மகரமெய் குறுகும்)

மேற்கண்ட நூற்பாக்கள், மகரமெய், னகர மெய்க்குப் பின்னரும், வகர மெய்க்கு முந்தியும் தன் அளவிலிருந்து பாதியாகக் குறுகும் என்று கூறுகின்றன. இந்த மகரக் குறுக்கமும், இருக்கும் எழுத்தாகிய மகரமெய், சொல்லில் தனக்கு முந்திய பிந்திய எழுத்தொலியின் பாதிப்பால் குறுகி ஒலிக்கும் நிலையேயாகும். இது தனியே தோன்றிய வேறு எழுத்தோ, மகர மெய்யினின்று பிறப்பாலும் முயற்சியாலும் வேறுபடுவதோ அன்று.

எனவே, மகாரக் குறுக்கம் தனியோர் எழுத்துமன்று; ஆதலின் அது சார்பெழுத்தும் அன்று.

ஆய்தக் குறுக்கம்

“உருவினும் இசையினும் அருகித் தோன்றும்

மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா

ஆய்தம் அஃகாக் காலை யான” (தொல். எழுத்து 40)

(தோற்றமும் ஓசையும் சார்ந்து தோன்றும் குறிப்புச்சொற்கள் எல்லாம், ஆய்தம் தன் இயல்பான சுருங்கிய அளவிலன்றிக் கூடுதலாக ஒலிக்கிறபோது,, எழுத்தால் குறிக்க இயலாதனவாகும்)

ஆய்தக் குறுக்கம் பற்றித் தொல்காப்பியர் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இந்த நூற்பாவில் ‘ஆய்தம் அஃகாக் காலை’ என்ற தொடருக்கு, ஆய்தம் குறுகாத போது என்றும் பொருள்கொள்ள வாய்ப்பிருப்பதால், ஆய்தம் குறுகும் இடமும் உண்டு என்று கொண்ட கருத்தின் விளைவாக உருவானதே ஆய்தக் குறுக்கம்.

நன்னூலார் இக் கருத்தைப் பின்வருமாறு மேலும் விரிக்கிறார்:

லளவீற்று இயைபினாம் ஆய்தம் அஃகும் (நன்னூல் 97)

(ல்ள் ஈறுகளின் இயைபினால் உருவாகும் ஆய்தம் குறுகும்)

அல் + திணை = அஃறிணை; முள் + தீது = முஃடீது என்பன போல, ல் + த, ள் + த என்ற சந்திப்புகளில் தோன்றும் ஆய்தம், கால் மாத்திரை ஒலிக்கும் குறுகிய ஆய்தம் என்று நன்னூல் உரைகள் விளக்குகின்றன.

அஃதொரு, அஃறிணை என்ற சொற்களை அடுத்தடுத்து ஒலித்துப்பார்த்தால், ஒலிப்பதில் காலவேற்றுமை எதுவும் புலப்படவில்லை. இரண்டுமே புணர்ந்துருவான சொற்கள்தான். இவற்றில் முந்தியதில் குறுகாத ஆய்தம், பிந்திய வகையில் மட்டும் குறுகுகிறது என்பதற்கு பொருத்தமான காரணம் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.

ல் + த் மயங்காத மெய்கள்; இவை திரிந்தே புணரும். ‘கைத்தடம்’ வலிமிகுவது போல், கால் + தடம் = காற்றடம் என்று புணரும். ஆனால், கால் + தூக்கி என்பது, ‘கைதூக்கி’ போல இயல்பாகப் புணருமிடம் ஆதலின், காறூக்கி என்றே புணரும். இதுவே கல் + தூக்கி எனில், கறூக்கி என்று புணரமுடியாது. ஏனெனில், முன்னர்க் கண்டதுபோல, க என்ற குறிலுக்குப்பின் எஞ்சிய மிகுதியான மூச்சாற்றல் தங்கித் தொடர்ந்தொலிக்க அங்கே அரை மாத்திரையளவு ஒலித்தடம் வேண்டும். கல்லடி என்பதைக் கல் அடி என்று நிறுத்தி ஒலித்தால்   (விட்டிசைத்தால்) ல் இரட்டிக்கத் தேவையில்லை. இதுபோல், கல் தூக்கி என்று விட்டிசைத்தால் நிறுத்தத் தடம் தேவையில்லை. அவை, சேர்ந்தொலிப்பதாயின், விட்டிசையை நிறைவுசெய்ய ஓர் அரைமாத்திரை ஒலிவேண்டும். அது ல் என்ற மயங்கா மெய்யாக அன்றி, த் என்ற மெய்யுடன் மயங்குவதாகவும் இருக்கவேண்டும். ஒரே நேரத்தில் இரு தேவைகளையும் நிறைவுசெய்யும் மாற்றுவழியாகவே, இங்கு ஆய்தம் தோன்றி உதவுகிறது.

இதே முறையில்தான், அல் + திணை = அஃறிணை என்றும், பல் + துளி = பஃறுளி என்றும் புணர்கின்றன.   இவைபோல, ள் + த், வ் + த் ஆகியனவும் மயங்காத மெய்ச்சந்திப்புகளே. முள் + தீது = முஃடீது என்று புணர்கிறது; அவ் + கடிய = அஃகடிய என்று புணர்கிறது. குறிலுக்குப்பின் விட்டிசைக்கும் இடத்தில் தகர மெய்யுடன் மயங்காத ல் ள் வ் என்ற மெய்களுக்கு மாற்றான பொது ஒலியாகவே ஆய்தம் தோன்றுகிறது. அரை மாத்திரையுடைய மெய்யின் இடத்தை நிறைவுசெய்ய வருவதால், ஆய்தமும் பிறக்கும்போதே அரைமாத்திரை அளவினதாகத் தோன்றுகிறது. எனவே, ல் + த், ள் + த் சந்திப்புகளில் ஆய்தம் குறுகும்மென்பது பொருந்தாது.

தொல்காப்பியர், ஆய்தக் குறுக்கம் பற்றியோ அதன் இடமும் அளவும் பற்றியோ எங்கும் கூறவில்லை; குறுகுவது பற்றிக்கூறும் இடங்களிலெல்லாம் ‘குறுகும்’ என்ற வினைச்சொல்லையே ஆளுகிறார். ஆய்தம் குறுகும் என்பதற்குச் சான்றாகக் காட்டப்படும் ஒரே நூற்பாவில், ‘அஃகா’ என்ற வினைச்சொல்லே, அதுவும் எதிர்மறையில் வருகிறது. ”… ஆய்தம் அஃகாக் காலை… “என்ற தொடருக்கு ‘ஆய்தம் தன் இயல்பான சுருங்கிய அளவிலன்றிக் கூடுதலாக ஒலிக்கும் போது” என்று உரையாசிரியர் கூறும் பொருளே பொருத்தமானது.

எனவே, ஆய்தக்குறுக்கம் என்னும் ஒன்று இல்லை; ஆதலின், அப்படியொரு சார்பெழுத்தும் இல்லை.

முடிவுரை

தொல்காப்பியர் கூறிய ‘சார்ந்துவரல் மரபு’டைய குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் மூன்றும் எழுத்தெனப் படுப என்ற முதன்மை எழுத்துகளின் குறுகிய வடிவங்கள் என்று நன்னூலார் கருதியதால், இயல்பான மாத்திரை அளவிலிருந்து குறுகியும் நீண்டும் ஒலிக்கும் எழுத்துகளெல்லாம் சார்ந்துவருவன என்று கொண்டு, அவ்வாறு குறுகியும் நீண்டும் ஒலிப்பதாகத் தாம் கருதியவற்றை எல்லாம் சார்ந்துவரும் பட்டியலில் சேர்த்துவிட்டார். ஆனால், தொல்காப்பியர், தாம் கூறிய சார்ந்துவரும் ஒலிகள் மூன்றும், பிறப்பிலேயே அரை மாத்திரையளவில் தனியே பிறப்பன என்று கண்டதாலேயே அவற்றுக்கு, எழுத்தோரன்ன என்ற தகுதியளித்து, அவை, சொற்களில் குறிப்பிட்ட இடங்களில் வரும் முதன்மை ஒலிகளைச் சார்ந்தே தோன்றுவதால், அவற்றைச் சார்ந்துவரல் மரபை உடையன என்றும் விளக்கினார். நன்னூலார் சேர்த்த ஏழும், தனியே பிறப்பனவல்ல என்பதால் எழுத்தோரன்ன என்ற தகுதியும் இல்லாதவை. இதனால் அவை சார்பெழுத்துகள் எனும் தகுதியை ஒருபோதும் பெறமாட்டா.

இனி, எழுத்தெண்ணிக்கை பற்றி முடிவுகாணும் முன்னர், சார்ந்துவருமென்று தொல்காப்பியர் கூறிய மூன்றன் தன்மைகளையும், நன்னூலார் சேர்த்த ஏழன் தன்மைகளையும் மீண்டும் சுருக்கமாக நோட்டமிடுவோம்.

தொல்காப்பியர் கூறும் ‘சார்ந்துவரல் மரபை’ உடைய ‘எழுத்தோரன்ன’ மூன்று ஒலிகள்: குற்றியலிகரம், குற்றிய லுகரம், ஆய்தம் ஆகியன. இவை இருக்கும் எழுத்துகளினின்று நீண்டனவோ குறுகியனவோ அல்ல; பிறப்பிலேயே அரை மாத்திரை ஒலிப்பளவுடன் தனியே தோன்றிய ஒலிகள்.

இவை சாரந்துவரும் மரபினை உடையனவாகக் கூறப்பட்டதன் காரணம், அவை ‘எழுத்தெனப்படுப’ என்று சிறப்பிக்கப்பட்ட முதன்மை ஒலிகள் குறிப்பிட்ட இடங்களில் வரும்போது அவற்றைச் சார்ந்து தோன்றுவதேயாம்.

குற்றியலுகரம், நெடிலுக்கும் தொடர்மொழிகளுக்கும் ஈறாக வரும் வல்லின மெய்களைச் சார்ந்து தோன்றுகிறது. மொழிமுதற் குற்றியலுகரமும், முன்னும் பின்னும் உள்ள நகர மெய்களைச் சார்ந்து தோன்றுவதே.

குற்றியலிகரம், ஒலிப்புச் சாயல் மாறிய குற்றியலுகரமேயாகும். இஃது,, அடுத்துவரும் யகரத்தைச் சார்ந்து ஒலிப்புச் சாயல் மாறியதால் மட்டும் சார்பொலியாகவில்லை; அது குற்றியலுகரம் என்ற சார்பொலியின் ஒலிப்புச் சாயல் மாறிய வடிவமே என்பதால் தனியே தோன்றிய அரை மாத்திரையுடைய சார்பொலியாகவே நிலைபெற்றது. தனிமொழிக் குற்றியலிகரமும் மகரமெய்யையும் அடுத்துவரும் யகரத்தையும் சார்ந்து தோன்றுவதே.

ஆய்தம், சொல்லின் முதலில் வரும் குறிலையும் அடுத்துவரும் வல்லினத்தையும் சார்ந்து தோன்றுகிறது.

நன்னூலார் மேலதிகமாகக் கூறும் ஏழு சார்பெழுத்துகளில்:

உயிர்மெய் தனியாகத் தோன்றிய ஒலியன்று; மெய்யும் உயிரும் சேர்ந்தொலிக்கும் நிலையே. எனவே அஃது இரு முதலெழுத்துகளின் சேர்க்கையே அன்றித் தனிவேறு சார்பெழுத்தன்று.

உயிரளபெடை, உயிர்நெடிலின் நீண்டொலிக்கும் வடிவமே அன்றித் தனியே தோன்றிய வேறு ஒலியன்று.  எனவே, இது நீண்ட முதலெழுத்தே அன்றி தனிவேறு சார்பெழுத்தன்று.

ஒற்றளபைடை, தொடரொலியுடைய  மெய்யொலி தொடர்ந்தொலிக்கும் நிலையே அன்றித் தனியே தோன்றிய வேறு எழுத்தன்று; எனவே, இது தொடர்ந்தொலிக்கும் முதலெழுத்தே அன்றித் தனிவேறு சார்பெழுத்தன்று.

ஐகாரக்குறுக்கம், சொல்லின் இடையில் குறுகி ஒலிக்கும் உயிர்நெடிலின் வடிவமே அன்றித் தனியே தோன்றிய வேறு ஒலியன்று. எனவே, இது குறுகிய முதலெழுத்தே அன்றித் தனிவேறு சார்பெழுத்தன்று.

மகரக்குறுக்கம், முன்னும் பின்னும் வரும் எழுத்துகளின் பாதிப்பால் குறுகியொலிக்கும் மகரமெய்யே அன்றித் தனியே தோன்றிய வேறு ஒலியன்று. எனவே, இது குறுகிய முதலெழுத்தே அன்றித் தனிவேறு சார்பெழுத்தன்று.

ஔகாரக்குறுக்கம், என ஒன்றில்லையாதலால், அப்படியொரு சார்பெழுத்தும் இல்லை.

ஆய்தக்குறுக்கம், என ஒன்றில்லையாதலால், அப்படியொரு சார்பெழுத்தும் இல்லை.

12 உயிர்களும் 18 மெய்களுமாகிய முதன்மை எழுத்தொலிகள், எதன் சார்புமின்றித் தாமே இயல்பாகவும் தன்னுரிமையாகவும் தோன்றும் ஒலிகள் ஆதலின், தனித்தன்மையுடைய முதல் எழுத்தொலிகளாயின. ஆனால், குற்றியலுகரமும் குற்றியலிகரமும் ஆய்தமும், அவ்வாறன்றி, மற்ற ஒலிகளையும் அவை வருமிடங்களையும் சார்ந்தே தோன்றும் ஒலிகள் ஆதலின் சார்ந்துவரும் ஒலிகள் எனப்பட்டன. இவை சார்ந்து தோன்றும் ஒலிகளாயினும், தமக்கென்றுரிய மாத்திரையளவுடன் தனியே தோன்றுவன ஆதலின், ‘எழுத்தோரன்ன’ என முதல் எழுத்தொலிக்கு அடுத்த நிலையில் வைக்கப்பட்டன.

எனவே, உயிர்மெய், உயிரளபெடை, ஒற்றளபெடை, ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம் மகரக்குறுக்கம் ஆய்தக் குறுக்கம் என்ற ஏழும் சார்பெழுத்துகள் என்ற நன்னூலாரின் கருத்து, சரியானதும் அன்று; தமிழ் இலக்கண மரபுக்குப் பொருத்தமானதும் அன்று.

அவ்வாறாயின், தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை, எழுத்துக்குரிய முழுத்தகுதியுமுடைய 12 உயிர்கள், 18 மெய்கள் என்ற 30 முதலெழுத்துகளும், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற 3 அடுத்தநிலை எழுத்துகளும் ஆகிய 33 மட்டுமேயாகும். 247உம் அன்று; 399உம் அன்று. எழுத்தெண்ணிக்கை பற்றிய வரை, இந்தத் தொல்காப்பிய மரபே, மாற்றருஞ் சிறப்பின் மரபாகும். இது மாறாத, மாறத்  தேவையில்லாத,  மாறுதல் கூடாத மரபு.

(இக் கட்டுரையில் வரும் கருத்துகளில் சிலவற்றையோ பலவற்றையோ ஆய்வாளர்கள் முந்தியே கண்டறிந்து கூறியிருக்கலாம். அவை அனைத்தையும் படித்தறிய வாய்ப்பில்லாமையால், அவர்களை இங்கு நன்றியுடன் குறிப்பிட இயலாமைக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். அத்தகைய அனைவருக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் வாழ்த்தையும் இங்குப் பதிவுசெய்ய விரும்புகிறேன் – கட்டுரையாளர்)

Subscribe to Comments RSS Feed in this post

4 Responses

 1. மிக அருமையான ஆய்வுக் கட்டுரை. அறிஞர் சீனி நைனாமுகமது அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளார். பாராட்டுகள்.
  ஆங்கிலச் சொற்கள் எழுத்துரு மாற்றத்தால் மாறி அமைந்துள்ளனவற்றை இணையப் பொறுப்பாளர் உடனே சரி செய்ய வேண்டும். உரி ய ஆங்கிலச் சொற்கள் யாவை என அறியும் பொழுதுதான் படிப்பது புரியும். உடன் ஆவன செய்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

 2. மிக அருமையான ஆய்வுக் கட்டுரை. அறிஞர் சீனி நைனாமுகம்மது அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளார். பாராட்டுகள்.
  ஆங்கிலச் சொற்கள் எழுத்துரு மாற்றத்தால் மாறி அமைந்துள்ளனவற்றை இணையப் பொறுப்பாளர் உடனே சரி செய்ய வேண்டும். உரி ய ஆங்கிலச் சொற்கள் யாவை என அறியும் பொழுதுதான் படிப்பது புரியும். உடன் ஆவன செய்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

 3. மரபும் மாற்றத்திற்குரியதே என்றாலும் வலிந்து கோடல் இயற்கைக்குப் பொருந்தாது ,அது செயற்கையே.என்னசெய்வது காலத்தின் கோலம்
  பழையன பழித்தலும்
  புதியன பிதற்றலும்
  வழுவல கால வகையினானே.

 4. மிக்கநன்று இக்கட்டுரையின் சிந்தனை தமிழ் மொழியினை ஆய்வோருக்குப் பயனைத் தர வல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*