தொல்காப்பியர் காலமும், பேராசிரியர் இலக்குவனார் ஆய்வும்-01

இலக்குவனார் திருவள்ளுவன்:

உலக மக்களுக்குக் கிடைத்த நூல்களில் தொன்மையில் முதலிடம் பெறுவது தொல்காப்பியம் மட்டுமே. அந் நூலுக்கும் முந்தைய நூல்கள்  பெரும்பாலானவை உள்ளமையை அந்நூலின் வாயிலாகவே அறிந்தாலும் அவை நமக்குக் கிட்டில. எனவே, கிடைத்த நூல்களில் முதல் நூலாய் அமைவது தொல்காப்பியம் மட்டுமே.

“”வரலாற்று ஆசிரியர்கள் தொல்காப்பியம் பற்றிய முழு அறிவையும் கண்டிப்பாகக் கொண்டு இருத்தல் வேண்டும். தொல்காப்பியத்தின் காலம் தமிழ்நாட்டின் பொற்காலமாகும். தொல்காப்பியம் நூலின் ஆசிரியர் இலக்கண அறிஞராக, மொழியியல் அறிஞராகப், புலவராக, மெய்யியலாளராக, வரலாற்று ஆசிரியராக, மன்பதை இயல் ஆளராகக் காணப்படுகின்றார். சமற்கிருத மொழி, பண்பாட்டு தாக்குறவினால் ஏற்படும் அழிவிலிருந்தும், சிதைவிலிருந்தும் தமிழ் மொழியையும், பண்பாட்டையும் காக்கும் காவலராக  அவர் திகழ்கிறார்.” “”அவரது காலம் கி.மு. 5320 முதல் கி.பி.500 வரை பல்வகையில் வரையறுக்கப்படுகிறது.” “”தொல்காப்பியர் காலம் இன்றும்  வாதத்திற்குரியதாகவே உள்ளது. தன்னுடைய அணுகு முறையில் நடுநிலை விரும்பக்கூடிய  ஆராய்ச்சி அறிஞருக்கு  இதனை வரையறுப்பதும் மிகவும் அரிதான ஒன்றாகும். அவருடைய காலத்தைச் சரியாக கண்டறிவது தமிழ்நாட்டின் உண்மையான வரலாற்றை எழுதுவதற்கு வரலாற்று ஆசிரியர்களுக்கு உறுதியாக உதவியாக அமையும்” என்கிறார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள். ஆதலின் தொல்காப்பியர் காலத்தை வரையறுக்க முயல்வது  பெரிதும் பாராட்டிற்குரியது.

சிறப்பும் தொன்மையும் மிக்க தொல்காப்பியத்தின் காலம் பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைத்தில. அறிஞர்கள்  பிற சூழல்கள் அடிப்படையில்  தொல்காப்பியக் காலத்தை அறிய முற்பட்டிருப்பினும் வெவ்வேறு கால முடிவையே தெரிவித்துள்ளனர். இக் கருத்துகளை ஒப்பிட்டு, உள்ளனவற்றில் பெரும்பாலும் ஒத்துவரக் கூடிய கருத்தினை ஏற்பதே நடைமுறைக்கு ஏற்றதாக அமையும்.  இவ்வாறு ஒப்பிடுகையில், தமிழின் சிறப்பை மறைக்க வேண்டும் என்பதையே வாழ் நோக்கமாகக் கொண்டுள்ள சிலர் – தமிழ் இலக்கியங்களின் காலத்தைப் பின்னுக்குக் தள்ளுவதிலேயே பூரிப்பு கொள்ளும் சிலர் – வெளியிடும் பொய்யுரைகளை ஆய்வுரைகளாகக் கருதாமல் புறந் தள்ள வேண்டும். பிற ஆய்வுரைகளை ஒப்பிட்டுக் கூடிய வரை ஒத்து வரக்கூடிய  சரியான முடிவை ஏற்க வேண்டும். அந்த வகையில் ஒப்பிடுவதற்காகப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் தொல்காப்பியர் காலம் குறித்துத்  தெரிவித்துள்ள ஆய்வுரைகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பேராசிரியர் அவர்கள், திருவையாற்று அரசர் கல்லூரியில்  புலவர் படிப்பு பயிலும் பொழுதே தொல்காப்பியம் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்பொழுது தொல்காப்பியர் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு எனக் குறித்திருப்பினும், மாணவப் பருவத்தில்  கிடைத்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகவும் அது தவறான முடிபு என்றும் பின்னர்ப் பேராசிரியரே குறிப்பிட்டுள்ளதால் அம் முடிபு தள்ளத்தக்கதாகிறது.

பேராசிரியர் அவர்கள், தொல்காப்பிய ஆராய்ச்சி, பழந்தமிழ், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், Tholkaappiyam in English with Critical Studies முதலிய தம்முடைய நூல்களிலும், குறள்நெறி இதழ்கள், பிற மலர்கள் முதலியவற்றிலும் சொற்பொழிவுகள், வகுப்புகளிலும் தொல்காப்பியர் காலம் குறித்து ஆராய்ந்து தெரிவித்துள்ளார். இவற்றுள் பொழிவுகள், கட்டுரைகள் குறித்த ஆவணங்கள் இன்மையால் அவற்றைக் கருதிப் பார்க்க இயலாது. எனவே, கிடைத்துள்ள அவரது படைப்புகளின் அடிப்படையில் தொல்காப்பியர் காலம் குறித்து வரையறுப்போம்.

உலக மொழிகளின் தாயாய்த் திகழும் தமிழிற்கு மிகவும் பிற்பட்டதே சமற்கிருதம். “தமிழர்களுடைய பழமையை நோக்குங்கால் ஆரியருடைய பழமையானது கணப் பொழுதிற்கு முன் பெற்ற இராய்ட்டர் (Reutur) தொலைவரிச் செய்தியை ஒக்கும்.” எனச் சென்னை ஆளுநராக இருந்த கிராண்டப்பு அவர்கள் தெரிவித்துள்ள கருத்து இதனை மெய்ப்பிக்கும். எனினும் நடுநிலை பிறழ்ந்த ஒரு சிலர் வேண்டுமென்றே சமற்கிருதக் காலத்தை எவ்வகைச் சான்றாதாரமுமின்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் முந்தையதாகவும் சான்றாதரங்கள்  இருப்பினும் அவற்றை மறைத்தும் திரித்தும் தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுபவர்களாகவும் தமிழிலிருந்து சமற்கிருதம் தன் நெடுங்கணக்கையும் சொற்பெருக்கத்தையும் உருவாக்கியிருக்க அதற்கு நேர்மாறாகத் தமிழ் சமற்கிருத்தில் இருந்து சொற்களைக் கடன் வாங்கியது போலவும் இலக்கியங்களை இரவலுக்கு வாங்கித் தனதாக்கிக் கொண்டது போலவும் திரித்து வருகின்றனர். என்றபோதும், உலக மொழிகள் பிறப்பிற்குக் காரணமான தமிழின் தாய்மை, தமிழின் தொன்மை, சமற்கிருதம் தமிழ் மொழியைப் பார்த்துத் தன்  எழுத்தமைப்பை உருவாக்கிக் கொண்டமை, ஆரியர் வருகைக்கு முன்பே  இன்று இந்தியா என்று அழைக்கப்படும் நிலப்பரப்பில் வழங்கி வந்த மொழியாகத் தமிழ் திகழ்ந்தமை, தமிழின் முதன்மை, என்பன போன்ற கருத்துகளில் ஒன்றையோ பலவற்றையோ  அறிஞர்கள் பலர்  வலியுறுத்தியுள்ளனர். அவர்களுள் சிலர் வருமாறு:

 • அபினாசு சந்திரதாசு (ரிக்வேத இந்தியா)
 • அறிஞர் மக்கே (இந்து நாகரிகம்) (Dr.Mackey- The Indus Civilization)
 • அண்ணல் அம்பேத்கார்
 • அறிஞர் அ.கி.நாயுடு
 • அறிஞர் அண்ணா
 • அறிஞர் ஆபிரகாம் பண்டிதர்
 • அறிஞர் ஈராசு அடிகள்
 • அறிஞர் ஒல்டுகாம் (தமிழ் வரலாறு)
 • அறிஞர் கிரீயர்சன் (கால்டுவெல் ஒப்பிலக்கணதின் மொழியாராய்ச்சிக் குறிப்புகள்)
 • அறிஞர் வி.கனகசபை (1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்)
 • அறிஞர் கே.கே.பிள்ளை
 • அறிஞர் பூரணலிங்கம் பிள்ளை
 • அறிஞர் ரியாசு டேவிட் (புத்த இந்தியா)
 • இரா.வேங்கடகிருட்டிணன் (தமிழே முதன் மொழி)
 • உருசிய அறிஞர்கள் (மாக்கடல் மருமங்கள்)
 • கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்
 • கு.பூங்காவனம், (உலக முதன்மொழி- தமிழ் )
 • சிந்துமொழி அறிஞர் இரா.மதிவாணன்
 • செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்
 • தமிழண்ணல்
 • தமிழறிஞர் கா.சுப்பிரமணியனார் (மொழி நூற்கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும்)
 • தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்
 • தனித்தமிழ்க் கடல் மறைமலையடிகள்
 • திருமணம் செல்வக் கேசவராயர்
 • துடிசைக் கிழார் அ.சிதம்பரனார் (கழகத்தமிழ் வினாவிடை)
 • ந.கி.கந்தையா (தமிழகம்)
 • நல்லூர் ஞானப் பிரகாசர்
 • நாவலர்  சோமசுந்தர பாரதியார்
 • பண்டிதர் சவேரிராயர் ( தமிழருடனான ஆரியக் கலப்பு : உண்மை
 • ஒளி) (The admixture of Aryan with Tamilar – The light of Truths)
 • பண்டிதர் சவகர்லால் நேரு
 • பரிதிமாற்கலைஞர் (தமிழ்மொழியின் வரலாறு)
 • பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை (தென்னாடு)
 • பார்ட்டிரிக்சு கார்ட்டோன் (புதையுண்ட பேரரசுகள்) (Patrix Cartetone-Burried Empires)
 • பி.டி.சீனிவாச ஐயங்கார் (The Past in the Present)
 • புலவர் அ.கு.வேலன் (வரலாற்றுக் காப்பியம்)
 • புலவர் குழந்தை
 • புலவர்மணி இரா.இளங்குமரன்
 • பேராசிரியர் க.அன்பழகன்
 • பேரறிஞர் தக்ரேங்கு (தமிழ் வரலாறு)
 • பேரா.கா.சுப்பிரமணியம் பிள்ளை (தமிழ் வரலாறு)
 • பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
 • பேராசிரியர் நீலகண்ட சாத்திரி
 • பேராசிரியர் முனைவர் க.வித்யானந்தன்
 • பேராசிரியர் வாசுதேவ விட்ணு தயாளு
 • மாகறல் கார்த்திகேயனார் (மொழிநூல்)
 • முத்தமிழறிஞர் மு.கருணாநிதி
 • முனைவர் மு.வரதராசனார்
 • முனைவர் மா.இராசமாணிக்கனார் (மொகஞ்சதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்)
 • முனைவர் வ.சுப.மாணிக்கம்
 • முனைவர். குலாம் அபி அல்லானா (இசுலாமாபாத்து)
 • முனைவர் சுப்பிரமணிய ஐயர்
 • முனைவர் நன்னன்
 • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
 • விருதை . சிவஞான யோகிகள் (தமிழகம்)
 • வின்சுலோ
 • விவேகானந்தர்
 • வீ.ஆர் இராமசந்திர தீட்சிதர் (தமிழர் தோற்றமும் பரவலும்) (Origin and Spread of the Tamils)

சென்னைப் பெருநிலப் பணியாட்சிக் கையேடு (Manual of Administration of  the Madras Presidency) முதலான ஆவணங்களிலும் ஆரியத்திற்கு முந்தைய தமிழின் தொன்மையும் சிறப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டிற்காக  அறிஞர்கள் சிலர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனவே தவிர, முழுமையான பட்டியல் தரவில்லை.

மேலும், “”1904-இல் இலண்டனில் வெளிவந்த ஆங்கில மொழி அகராதியில்  திராவிடன் என்கின்ற சொல்லுக்கு “திராவிடம்- ஆரியரல்லாத மக்களைக் கொண்ட ஒரு பழமையான மாகாணம் என்றும், தமிழன் – (தமிழகம்) – ஆரியருக்கு முன்பிருந்த மக்கள், ஆரிய பாசை அல்லாததைப் பேசுபவர்கள்’ என்றும் எழுதியிருப்பதோ டல்லாமல், இலங்கையையும் திராவிடம் என்று எழுதி இருக்கிறது” என அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் (கருணாமிருத சாகரம்) குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே, தமிழ் மொழி சமற்கிருதத்திற்கு முற்பட்டதும் முதன்மையானதுமாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆதலின், தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் புறந்தள்ளி நாம் ஆய்வுக் குறிப்புகளைக் காண்போம்.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*